சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் உரிமை – சன் தொலைக்காட்சி செய்த அதிரடி

விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின்செல்வன்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கிறது. முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபார வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் தெலுங்குப் பதிப்பை தெலுங்கின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான தில்ராஜு வெளியிடவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்பான இணைய ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றைப் பெற கலைஞர் தொலைக்காட்சி பேச்சுவார்த்தை நடத்திவந்தது.

பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்து ஓரிருநாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் அதில் அதிரடி மாற்றம் நடந்துள்ளதாம்.

திடீரென உள்ளே நுழைந்த சன் தொலைக்காட்சி, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் ஒளிபரப்பும் உரிமையைக் கைப்பற்றிவிட்டதாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணைய வெளியீடு ஆகிய உரிமைகளை சன் தொலைக்காட்சி பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கான விலை சுமார் ஐம்பது கோடி என்கிறார்கள்.

கலைஞர் தொலைக்காட்சி பேசிக்கொண்டிருந்த ஒரு வியாபாரத்தை அதிரடியாக உள்ளே புகுந்து தனதாக்கிக் கொண்ட சன் தொலைக்காட்சியின் செயல் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Related Posts