வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ராஜீவ்மேனன் – பதட்டத்தில் தயாரிப்பாளர்
கிஷோர், சூரி, விஜய்சேதுபதி மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.
ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.
இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.அவர் இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.
இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஐம்பதிலிருந்து அறுபதுநாட்கள்தாம் படப்பிடிப்பு இருக்குமென்று முதலில் சொல்லப்பட்டது.
ஆனால், நாட்கள் கணக்கின்றி இன்னும் படப்பிடிப்பு தொடர்கிறதாம்.
படப்பிடிப்பு தொடர்வது மட்டுமின்றி புதிதுபுதிதாகக் கதாபாத்திரங்களும் சேர்கின்றனவாம்.
இப்போது இந்தப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்கவேண்டும் என இயக்குநர் ராஜீவ்மேனனை அணுகியிருக்கிறார்களாம். அவரும் கதாபாத்திரத்தின் தன்மையைக் கேட்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல்.
தொடக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதைநாயகனாக இருப்பார் என்று சொல்லப்பட்டது. அதன்பின் கெளரவ வேடத்தில் நடிக்க வந்த விஜய்சேதுபதியின் பாத்திரத்தைப் பெரிதாக்கி அவரே கதாநாயகன் என்று சொல்லுமளவுக்கு ஆகிவிட்டது என்றார்கள்.
அதோடு முடியாமல் அடுத்தடுத்தும் கதாபாத்திரங்கள் கூடிக்கொண்டு போவதால் படப்பிடிப்பு எப்போது நிறைவுபெறும் என்று தெரியாமல் தயாரிப்பாளர் எல்ரெட்குமார் தரப்பில் பதறுகிறார்களாம்.
அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, இந்தப்படத்தை இரண்டு பாகங்களாக்கி விடுகிறேன், உங்களுக்கு ஒன்றுக்கு இரண்டு படங்கள் ஆகிவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம் வெற்றிமாறன்.
ஏற்கெனவே வடசென்னை இரண்டாம்பாகம் வேறு காத்திருக்கிறது என்பதால் தயாரிப்புத்தரப்பு வெற்றிமாறனின் பேச்சை நம்பாமல் பதட்டத்துடனேயே இருப்பதாகத் தகவல்.
அவர்களுக்கு வெற்றிமாறனிடமிருந்து எப்போது விடுதலை கிடைக்குமோ?











