பொன்னியின் செல்வன் வியாபாரம் மணிரத்னம் முட்டுக்கட்டை – என்ன நடக்கிறது?
கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன்.
இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
லைகா நிறுவனத்தின் முதலீட்டில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுக்க லைகா நிறுவனம் முடிவு செய்ததாம்.
ஆனால், அதற்கு மணிரத்னம் ஒப்புக்கொள்ள மறுக்கிறாராம்.
வியாபார முடிவுகள் தயாரிப்பாளர்கள் எடுக்கவேண்டியதுதானே? அதில் மணிரத்னம் எங்கே வந்தார்? என்கிற கேள்வி வரும்.
அதற்கான விடை தேடினால் பெரிய கதை இருக்கிறது.
இப்படத்தின் இரண்டுபாகங்களையும் மணிரத்னம் எடுத்துக் கொடுத்துவிட வேண்டும். அதற்காக சுமார் 225 கோடியை லைகா நிறுவனம் மணிரத்னத்துக்குக் கொடுத்துவிடவேண்டும்.
படம் தாமதமானதால், அந்த 225 கோடிக்கு குறைந்தபட்ச வட்டி போட்டு அதையும் கணக்கில் சேர்க்கவேண்டும்.
பட வியாபாரத்தில் கிடைக்கும் தொகையில் அந்தப்பணத்தை முதலில் எடுத்துக் கொண்டு அதன்பின் வரும் தொகைகளில் லைகாவுக்கு 70 மணிரத்னத்துக்கு முப்பது விழுக்காடு என ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
30 விழுக்காடு உரிமை இருப்பதால்தான் மணிரத்னம், ரெட்ஜெயண்ட்டுக்குப் படம் கொடுப்பதை எதிர்க்கிறாராம்.
அதற்கும் காரணம் இருக்கிறது.
ரெட்ஜெயண்ட் நிறுவனம் எந்தப்படத்தையும் விலை கொடுத்து வாங்குவதில்லை. அவர்கள் வெளியிடுகிற படங்களை திரையரங்குகளில் வெளியிடுவார்கள். வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தரகு எடுத்துக் கொண்டு மீதியைத் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்துவிடுவார்கள்.
இந்தமுறையில் படத்தை வெளியிட்டதால்தான் கமல் பலகோடி சம்பாதிக்க முடிந்தது.
பொன்னியின் செல்வனை அப்படிக் கொடுத்தால் மணிரத்னத்தின் பங்கு பட வெளியீட்டுக்குப் பின் தான் கிடைக்கும். ஒருவேளை படம் சரியாகப் போகவில்லையென்றால் பங்கே இல்லையென்றாகிவிடும்.
அதனால்தான், என் படங்களை இம்மாதிரி விநியோகமுறையில் நான் கொடுத்ததே இல்லை. எம்ஜி அல்லது அவுட்ரேட் முறையில் தான் கொடுப்பேன். அவ்வாறே இந்தப்படத்தையும் விற்பனை செய்து என் பங்கை வெளியீட்டுக்கு முன்பே கொடுத்துவிடுங்கள் என்கிறாராம்.
அவர் சொல்கிற மாதிரி படத்தை வாங்கி வெளியிட இதுவரை யாரும் முன்வரவில்லை என்பதால் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறதென்று சொல்கிறார்கள்.
என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.











