தேஜாவு – திரைப்பட விமர்சனம்
தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர் அதாவது டிஜிபி மதுபாலா.அவருடைய மகள் ஸ்முருதிவெங்கட். அவர் ஒருநாள் திடீரென கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார் மதுபாலா. அந்தச் சிறப்பு அதிகாரி நாயகன் அருள்நிதி.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
நாயகன் அருள்நிதி, காவல்துறை அதிகாரி வேடத்துக்கேற்ற உடல்மொழியைக் கொண்டிருக்கிறார். நடிப்பிலும் நன்று.இறுதிக்காட்சிகளில், காதலியிடம் குழைவதையும் எதிரிகளிடம் குமுறுவதையும் சரியாகச் செய்து பாராட்டுப் பெறுகிறார்.அக்காட்சிகள் அடுத்தடுத்து இடம்பெற்றிருப்பது அவருக்குப் பலம்.
காவல்துறைத் தலைவராக நடித்திருக்கும் மதுபாலா, கொடுத்த காசுக்குக் கூடுதலாகவே நடித்திருக்கிறார் என்பதால் பல இடங்களில் பொருத்தமாக இல்லை.
எழுத்தாளராக நடித்திருக்கும் அச்யுத்குமார், காவலராக நடித்திருக்கும் காளிவெங்கட் ஆகியோர் படம் இலகுவாகக் கடந்து செல்ல உதவியிருக்கிறார்கள்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு உதவுகிறது.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்கேற்ப அமைந்திருக்கிறது.
ஓர் எழுத்தாளர் எழுதுவதெல்லாம் நிஜத்தில் அப்படியே நடக்கிறது என்று கதை சொல்லத் தொடங்கி, காவல்துறையினரின் எதார்த்தமான நடவடிக்கைகள்,பாதிக்கப்பட்டவர்களின் கோபம் ஆகியனவற்றைக் கோர்த்து படத்தை புத்திசாலித்தனமாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர் அரவிந்த்சீனிவாசன்.
திரைக்கதையில் இருக்கும் பல பலவீனங்களையும் தாண்டி அருள்நிதியின் பலத்தால் படம் நிமிர்ந்து நிற்கிறது.











