கமலால் கூட இவ்வளவு சிறப்பாக நடித்திருக்கமுடியாது – கலை இயக்குநர் விஜய்முருகன் பேட்டி
அண்மையில் வெளியாகி இருக்கும் இரவின் நிழல் படம், பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பார்த்திபன் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்தில் கண்ணுக்குத் தெரியாத ஆளுமையாகப் படத்தை ஆக்கிரமித்துள்ளவர் கலை இயக்குநர். அப்பணியைச் செய்துள்ளவர் விஜய் முருகன்.படம் பார்த்த திரை உலகப் பிரபலங்கள் அனைவரும் அவரது உழைப்பை அடையாளம் கண்டு பாராட்டுகின்றனர்.
வாழ்த்துமழையில் நனைந்து கொண்டிருக்கும் கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகனைச் சந்தித்தபோது…..
1.நீங்கள் எப்போது கலை இயக்குநர் ஆனீர்கள்? சற்றே உங்கள் முன் கதை சொல்ல முடியுமா?
எனக்குச் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள தண்டரை கிராமம்.எனது மாமா சீனிவாசன் பிரபலமான சிற்பி. நிறைய விருதுகள் வாங்கி உள்ளார்.என்னை அவர் தான் வளர்த்தார். எனவே அவரது தாக்கத்தால் எனக்குச் சிறு வயதிலிருந்து ஓவியம், கலை என்று ஆர்வம் வந்துவிட்டது.
என்னை அவர்தான் சினிமாவில் கலை இயக்கம் ஒன்று இருக்கிறது என்று கூறி என்னைச் சினிமாவில் சேர்த்து விட்டார்.நான் 17 வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டேன்.நான் மோகன் மகேந்திரன் அவர்களிடம் உதவியாளராக இருந்து சினிமாவுக்கான கலை இயக்கத்தின் தொழில்சார்ந்த பணிகளைக் கற்றுக் கொண்டேன்.
நான் முதலில் பணியாற்றிய படம் சார்லி சாப்ளின்.அதன் பிறகு அரவான், குடைக்குள் மழை, சுறா, பரமசிவம், ஜனா கதை திரைக்கதை வசனம், ஜிகர்தண்டா, இறைவி, விஐபி, மாரி, கோலிசோடா எங்கிட்ட மோதாதே, சத்ரியன் என்று தொடர்ந்து ஐம்பதாவது படமான இரவின் நிழல் வரை பணியாற்றி இருக்கிறேன்.
2.இரவின் நிழலில் உங்களது கலைஇயக்கம் பலராலும் பாராட்டப்படுகிறது. படத்தில் பாராட்டப்படும் அந்த அரங்க அமைப்புகள் பணி அனுபவங்கள் பற்றி?
இரவின் நிழல் படத்தைப் பொறுத்தவரை அது இரண்டு ஆண்டு காலப் பயணம். அந்தப் படம் தனக்கான ஆட்களைத் தானே தேடிக் கொண்டது. தானாக அதைத் தேடி வந்த ஆட்களைப் புறந்தள்ளியது என்று தான் சொல்ல வேண்டும்.
இரண்டு ஆண்டு காலம் இயக்குநர் பார்த்திபன் அவர்களுடன் பயணம் செய்து அவர் மனதில் தோன்றிய எண்ணங்களைப் புரிந்து கொண்டு ஏராளமான மாற்றங்களையும் திருத்தங்களையும் மேம்பாடுகளையும் கண்ணெதிரே பார்த்துக் கொண்டு மனதில் ஊறி ஊறி அந்த படத்தோடு ஒன்றி பணியாற்றிய படம் அது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள் நான் பார்த்திபன் சார் அவர்களுடன் 20 ஆண்டுகளாகப் பயணம் செய்கிறேன். அவரது ஐந்து படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய போது கூட முதலில் இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று நான் நினைத்தேன்.அவர் நினைப்பதெல்லாம் சாத்தியப்படுமா என்று சில சந்தேகங்கள் எனக்கு இருந்தன, அவை கருத்து முரண்பாடுகளாக மாறின. எனவே வெளியேறி விட்டேன்.ஒரு கட்டத்தில் அவர் இப்படி சினிமாவில் புதிதாக முயற்சி செய்ய நினைக்கும்போது அப்படி நினைப்பதைச் சாத்தியப்படுத்திப் பார்த்தால் தான் என்ன என்று தோன்றியது. இந்த முயற்சியில் நாமும் பங்கெடுத்தால் என்ன என்று தோன்றி மீண்டும் வந்து இணைந்து விட்டேன்.அப்படிப்பணியாற்றிய படம் தான் இந்தப் படம்.
3. இந்தப் படத்திற்காக எத்தனை செட்கள் போடப்பட்டன?
சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளத்துக்கு 72 இடங்களில் 59 செட்கள் போடப்பட்டன.செட்டின் பின்னிணைப்பாக போடப்பட்ட செட்களையும் சேர்த்தால் 72 செட்கள் வரும்.
இதற்காக நாங்கள் இடம் தேடிப் போன போது கேளம்பாக்கம் அருகே ஒரு இடத்தைக் கண்டுபிடித்தோம். அது 60 முதல் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம்.

vijaymurugan – parthiban
4.ஒரே ஷாட்டில் எடுக்கும் படம் என்பதற்காக உங்களது முயற்சி எப்படி இருந்தது? ஐம்பது படங்களில் பணியாற்றிய அனுபவம் கைகொடுத்ததா?
இதுவரி நான் பெற்ற எந்த அனுபவமும் கைகொடுக்கவில்லை. இந்தப்படத்தில் முற்றிலும் புதிய அனுபவங்கள்.
வழக்கம்போல சுதந்திரமாக அரங்கமைப்புகள் என்றால் புகுந்து விளையாடி விடுவோம். ஆனால் இது ஒரே ஷாட் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரும் படமாக எடுக்கக்கூடிய திட்டம் என்கிற போது அனைவரையும் ஒரு பதற்றமும் நிர்பந்தமும் தொற்றிக் கொண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.யார் பிழை செய்தாலும் முழு படமும் முதலிலிருந்து தொடங்க வேண்டும் என்பதால் அனைவருக்கும் நிர்ப்பந்தம் உண்டு. அதே சமயத்தில் நிதானத்தையும் இழக்கக்கூடாது.
அதற்கேற்றபடி தான் இந்த செட்களைப் போட வேண்டும்.கேமரா முதல் காட்சி ஒளிப்பதிவு செய்ய ஆரம்பித்ததில் இருந்து இறுதிக்காட்சி முடியும் வரை தங்கு தடையின்றி அந்தக் கேமரா பயணம் செய்யுமாறு கேமராவின் பயணத்துக்கு ஏற்றபடி அமைக்க வேண்டும். அதில் பல்வேறு வகையான பின்புலங்களையும் நிகழ்விடங்களையும் 1970, 1980, 2000, 2010, 2020 என்று பல்வேறு கால கட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்த அரங்குகள் இருக்க வேண்டும் என்பது பெரிய சவால்தான்.
நான் போட்ட இந்த செட்கள் நகரும்படியாகவும் திறந்து மூடும் படியாகவும் படப்பிடிப்புக்கு ஏற்ற வரையில் வடிவமைப்பது தான் பெரிய சவால்.முன்னே நகர்ந்து வளைந்து ஏறக்குறைய வட்டமாகச் சுற்றி வரும் நிலையில் இந்த அரங்குகளின் அமைப்பு வேலைகளைச் செய்தோம்.அந்த செட்களை அமைப்பதற்கு இடங்களைக் கண்டறிந்து அடையாளம் இடுவதற்கே 18 நாட்கள் எடுத்துக்கொண்டோம்.இதைப் போட்டு முடிக்க சுமார் 4000 தொழிலாளர்களின் உழைப்பு தேவைப்பட்டது.
படப்பிடிப்பு நடக்கும்போது எனக்கு உதவியாக சுமார் 30 உதவியாளர்கள் இருக்க வேண்டும். அவ்வளவு பேருக்கும் ஊதியம் கொடுப்பதும் பெரிய சவாலாக இருந்தது. எனவே கவின் கலைக் கல்லூரி மாணவர்களை உதவியாளர்களாக வைத்துக் கொண்டேன்.
ஒருமுறை செட் போட்டுவிட்டு எப்போது வேண்டுமானாலும் அதில் படப்பிடிப்பு நடத்தலாம் என்கிற நிலை இதற்கு உதவாது .ஒவ்வொரு நாளும் புதிதாக அதில் வேலை இருக்கும்.
உதாரணமாக ஒரு புல்வெளி போல் படத்தில் காட்சி வரும் அந்தப் புல்வெளிக்கான புல் பத்தைகளை வெளியில் இருந்து கொண்டு வந்து மாலை 4 மணிக்கு அமைப்போம். 6 மணிக்கு வேலை முடிந்ததும் 8 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கும் .மறுநாள் அது வாடி விடும் என்பதால் புதிதாக அது மாதிரி புல்வெளி பதியன்களைக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.
படத்தில் வரும் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் அவ்வப்போது சேதாரம் ஆகும். உடனே அதைச் சரி செய்ய வேண்டும்.இப்படி அனைவருமே துடிப்புடன் இருந்து ஒத்துழைத்ததால்தான் இந்தப் படத்தை இவ்வளவு வெற்றிகரமாக எடுக்க முடிந்துள்ளது.
இந்த படத்திற்காக 98 நாட்கள் ஒத்திகை,படப்பிடிப்பு என்று நடந்தது.23 நாள் முழுமையான படப்பிடிப்பு நடந்தது.
5. பார்த்திபனுக்கும் உங்களுக்கும் உள்ள புரிதல் எப்படி இருந்தது?
நான் அவரிடம் 20 ஆண்டு காலமாகத் தொடர்ந்து நட்புறவில் இருக்கிறேன். இது எப்படி சாத்தியம் அவர் ஒரு சிக்கலான குணச்சித்திரம். புதிதாக யோசிப்பவர். புத்திசாலித்தனமாகவும் ஏன் கிறுக்குத்தனமாகவும் மாறுபட்ட பணத்தில் வசிப்பவர் அவரிடம் எப்படி உன்னால் தொடர்ந்து போக முடிகிறது என்று நண்பர்கள் கேட்பார்கள். ஆனாலும் அவர் சினிமாவிற்காக எதையும் செய்யக் கூடியவர் என்கிறஅவருடைய இயல்பைப் புரிந்து கொண்டு நான் பயணம் செய்கிறேன்.
6. கலை இயக்குநராக இருக்கும் நீங்கள் நடிகரானது எப்படி?
என்னை முதலில் நடிகனாக்கியவர் விஜய் மில்டன் தான்.கோலிசோடா படத்தில் ஏற்கெனவே பணியாற்றிய கலை இயக்குநருக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்ததால் என்னை உதவிக்கு அழைத்தார்.என்னுடைய அசைவுகளையும் உடல் மொழியையும் பார்த்துக் கொண்டு விட்டு என்னைப் படத்தில் மயில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு சாணிக்காயிதம் வரை சில படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடிகர் ஆனது ஒரு விபத்து போலத்தான்.ஆனால் போகப்போக பலரும் சொன்ன கருத்துக்களை வைத்து என்னை நானே மேம்படுத்திக் கொண்டு ஒரு வளரும் நடிகராக இருந்து வருகிறேன்.இதுவரை ஏழு படங்கள் நடித்துள்ளேன்.இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறேன்.நான் எதிர்கொள்ளும் மனிதர்கள் என்னை எங்கோ பார்த்த ஞாபகம் கொண்டு விசாரிக்கிறார்கள்.இப்போதும் நடிக்க அழைப்புகள் வருகின்றன.ஆனால் மனதளவில் எனக்குப் பிடித்தால்தான் அதில் நடிப்பேன்.
7. இரவின் நிழல் படம் சார்ந்த மறக்க முடியாத பாராட்டு எது?
படம் இயக்குநர்களுக்காகத் திரையீடு செய்யப்பட்டபோது 50க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் படத்தைப் பார்த்தார்கள்.பலரும் என்னைப் பாராட்டினார்கள், பெயர் குறிப்பிடாமல் கலை இயக்குநர் என்று பலரும் என்னைப் பற்றிப் பாராட்டிச் சொன்னார்கள். பத்திரிகை விமர்சனங்களிலும் என் பெயர் குறிப்பிடப்பட்டு பாராட்டப்படுவதில் மகிழ்ச்சி.குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் என்னைப் போனில் அழைத்துப் பாராட்டியது மறக்க முடியாதது.
திரையரங்குகளில் படம் பார்க்கிற போது பலரும் என்னைப் பற்றிப் பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது.அந்த காளகஸ்தி கோவில் செட் அப்படியே தத்ரூபமாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள்.
யாரோ முகம்தெரியாத ஒருவர் என் போன் நம்பரை தேடிப்பிடித்துப் பேசினார். படம் பார்த்ததிலிருந்து அரங்க அமைப்புகள் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. உங்களைப் பார்க்கவேண்டும், பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும் என்றார். எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
8. இந்தப்படத்தை இந்தியில் எடுக்கப்போவதாகச் சொல்கிறார்களே?
நான் இந்தப்படத்தைப் பலமுறை பார்த்துவிட்டேன். பார்த்திபனே கதை வசனம் ஆகியனவற்றை எழுதி அதற்குள்ளேயே ஊறிக்கிடந்ததால் எல்லா வசனங்களையும் சிறப்பாகப் பேசியதுடன் படப்பிடிப்பில் புதிய வசனங்களையும் சேர்த்துப் பேசினார். எனக்குத் தெரிந்து அவர் தவிர வேறு யாராலும் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்திருக்க முடியாது. ஏன் கமல் இந்தப்படத்தில் நடித்தால் கூட இவ்வளவு சிறப்பாக நடித்திருக்கமுடியாது. அப்படி இருக்கும்போது ஹிருத்திக்ரோசனால் எப்படி நடிக்கமுடியுமென எனக்குத் தெரியவில்லை.
– சரவணன்











