Uncategorized சினிமா செய்திகள்

ஒரு டஜன் நடிகர்களை முந்திய துருவ்விக்ரம் – புதிய பட விவரம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ்விக்ரம், 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்யவர்மா படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானார். அதன்பின் அவர் முதலில் நடித்த வர்மா படம் வெளியானது. இவற்றிற்குப் பிறகு மகான் படத்தில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான அந்தப்படத்தில் அவருடைய அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார்.

அந்தப்படத்துக்குப் பின் நிறையப் பேர் அவரை நடிக்க வைக்க முயன்றனர். முடியவில்லை. அந்த நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.2021 சனவரி 28 ஆம் தேதி அந்த அறிவிப்பு வெளியானது.

கொரோனா சிக்கல் மற்றும் மாமன்னன் படத்தை இயக்க மாரிசெல்வராஜ் போனது ஆகிய காரணங்களால் அந்தப்படம் தொடங்கப்படவில்லை.

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில், மாரிசெல்வராஜ் இயக்கும் படத்துக்கு அடுத்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் துருவ்விக்ரம்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வெற்றி பெற்ற படம் டாடா. இந்தப்படத்தை இயக்கியிருந்த கனேஷ் கே.பாபு இயக்கும் புதிய படத்தில்தான் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இவற்றைவிட முக்கியமான செய்தி. இந்தப்படத்துக்காக துருவ்விக்ரமுக்குக் கொடுக்கப்படவிருக்கும் சம்பளம் பற்றிய செய்திதான்.

அப்படி என்ன முக்கியம்?

துருவ்விக்ரமின் முதல்படமே இரண்டாக வந்தது. அதன்பின் அவர் நடித்த மகான் நேரடியாக இணையத்தில் வெளியாகியது. மூன்றாவது படம் இன்னும் தொடங்கவே இல்லை. இதனால் அவருக்கு சந்தைமதிப்பு என்ன? என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட நிலையில், அவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் படத்துக்கு வாங்கவிருக்கும் சம்பளம் சுமார் மூன்று கோடி என்று சொல்லப்படுகிறது.

இதன்மூலம் அதர்வா, கவுதம்கார்த்திக் உள்ளிட்டு தற்போது கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருக்கும் சுமார் ஒரு டஜன் நடிகர்களைவிட அதிகச் சம்பளம் வாங்கும் நிலைக்கு அவர் உயர்ந்துள்ளார் என்று சொல்கிறார்கள்.

Related Posts