மாநாடு போல் மஹாவும் வெற்றி பெறும் – புதிய காரணம் சொல்லும் இரசிகர்கள்

ஹன்சிகா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50 ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப்படி அவர் பெயர் மஹா.
ஸ்ரீகாந்த்,தம்பி ராமையா,கருணாகரன்,மானஸ்விகொட்டாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்தின் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.சிறப்புத் தோற்றம் என்று சொல்லப்பட்டாலும் சுமார் நாற்பது நிமிடங்கள் படத்தில் அவர் வருகிறாராம்.இதனால் படம் முழுக்க அவர் நிறைந்திருப்பார் என்பதில் மாற்றமில்லை. இந்தப் படத்தில் அவர் பெயர் மாலிக்.
யு.ஆர்.ஜமீல் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு லக்ஷ்மண் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் சார்பில் மதிழயகன் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விரைவில் படம் வெளியாவதையொட்டி சிம்பு இரசிகர்கள் பெரிதாகக் கொண்டாடிவருகின்றனர். மதுரையில் ஆயிரம் அடி நீளத்துக்கு ஒரு மிகப்பெரிய விளம்பரப் பதாகை வைத்து திரைப்பட இரசிகர்களையும் பொதுமக்களையும் வியந்து பார்க்க வைத்துள்ளனர்.
இதற்கு முன்பாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் அவர் பெயர் அப்துல்காலிக். இந்தப்படத்தில் அவர் பெயர் மாலிக்.
மாநாடு படத்தில் இஸ்லாமியப் பெயரில் நடித்திருந்தார் சிம்பு. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப்படத்திலும் இஸ்லாமியப் பெயர் என்பதால் இதுவும் நிச்சய வெற்றி என்று அவருடைய இரசிகர்கள் சொல்லி மகிழ்கின்றனர்.