சினிமா செய்திகள்

பா.இரஞ்சித் விக்ரம் இணையும் படம் இன்று தொடக்கம் – நாயகி யார் தெரியுமா?

விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார்.

இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகத் தயாராகும் இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்.ஆர்.பிரபு, அபினேஷ் இளங்கோவன், சி.வி.குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

‘சீயான் 61’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்பு செல்வா. சண்டைக் காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் எழுதுகிறார்கள்.

பா. ரஞ்சித் இயக்கும் ‘சீயான் 61’ படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதேசமயம், இந்தப்படத்தில் விக்ரம் இணையாக ராஷ்மிகாமந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. படத்தின் கதையைக் கேட்டவுடன் மிகவும் பிடித்துப் போய் நடிக்க ஒப்புக்கொண்டாராம் ராஷ்மிகா.

முதன்முறை ஜீ.வி.பிரகாஷுடன் பா.இரஞ்சித் இணைவதும் இந்தப்படத்தில் விக்ரம் ராஷ்மிகா இணை சேருவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts