சினிமா செய்திகள்

சசிகுமாருக்கு முட்டுக்கட்டை போடும் பாரதிராஜா – வெடிக்கும் விமர்சனங்கள்

இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் குற்றப்பரம்பரை எனும் படத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது.

வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தன் உயிரைத் துச்சமென மதித்து, நிராயுதபாணியாகப் போராடிய மக்கள் மீது ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் போராட்டங்கள் குறித்து பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குநர் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் இயக்க இருப்பதாக அறிவித்தார்கள்.

அதற்காக, தேனியில் பெரிய அளவில் தொடக்கவிழாவெல்லாம் நடத்தினார்கள்.உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

ஆனால் அதோடு அப்படியே நின்று போனது.

இப்போது குற்றப்பரம்பரைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம் சசிகுமார்.

வேலராமமூர்த்தியும் அவருடன் இணைந்து பணியாற்றவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சசிகுமார் இயக்கத்தில் அவரே நடிப்பது அல்லது இயக்கம் மட்டும் செய்து வேறு நடிகர்களை நடிக்கவைப்பது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை நடந்து வருகிறதாம்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்துக்கான வேலைகளின் ஒரு பகுதியாக குற்றப்பரம்பரை எனும் பெயரைப் பயன்படுத்துவதற்காக பாரதிராஜாவை அணுகினார்களாம். அவரோ, பெயரைத் தரமுடியாது என்று சொல்லிவிட்டாராம்.

அதோடு, அவர் மகன் மனோஜ் இயக்கத்தில் அப்படத்தை எடுக்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறாராம். அப்படத்தை சுரேஷ்காமாட்சி தயாரிக்கப்போவதாகவும் சொல்கிறார்களாம்.

ஆறேழு ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த ஒரு விசயத்தை சசிகுமார் கையில் எடுத்திருக்கிறார். அவரை வாழ்த்தி அவருக்கு வழிகாட்டியிருக்கலாம்.அதற்கு மாறாக சசிகுமாருக்குப் போட்டியாக தன் மகனை வைத்து இப்படி ஒரு வேலையை பாரதிராஜா செய்யலாமா? என்கிற விமர்சனங்கள் வருகின்றன.

Related Posts