சினிமா செய்திகள்

விஜய் படத்துடன் மோதும் பொன்னியின் செல்வன் இரண்டாம்பாகம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் பொன்னியின்செல்வன்.

இரண்டு பாகங்களாகத் தயாராகியிருக்கும் இந்தப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது அதன் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

இந்நிலையில், அப்படத்தின் இரண்டாம்பாகத்தின் வேலைகளும் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதற்கான படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டதாகவும் இப்போது அதற்குப் பிறகான பணிகள் நடப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதோடு, செப்டம்பர் 30 ஆம் தேதி முதல்பாகம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதன்பின், மூன்றரை மாதங்கள் கழித்து சனவரி 14,2023 இல் தமிழர்திருநாளையொட்டி இரண்டாம்பாகத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

அந்தத் தேதியில் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வாரிசு படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

பண்டிகை நாள் என்பதாலும் தொடர்ந்து பல நாட்கள் அரசுவிடுமுறை வரும் என்பதாலும் அந்த நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்.

பொதுவாக விஜய் படம் வெளியாகும் நேரத்தில் மற்ற படங்களை வெளியிட யோசிப்பார்கள். ஆனால், பொன்னியின் செல்வனுக்கு மக்கள் வரவேற்பு தருவார்கள் என்கிற நம்பிக்கையிலும் இதுபோன்ற பொங்கல்நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியிடலாம் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறுவதாலும் பொன்னியின் செல்வன் இரண்டாம்பாகத்தை விஜய் படத்தோடு மோதவிடவிருக்கிறார்களாம்.

Related Posts