விமர்சனம்

விக்ரம் – திரைப்பட விமர்சனம்

இரண்டு இலட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஒரு காவல்துறை அதிகாரி அதிரடியாகப் பறிமுதல் செய்து தனது துறைக்கே தெரியாமல் மறைத்து வைக்கிறார். அதனால் அவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்கிறார்கள். அக்கொலையில் சம்பந்தப்பட்ட வில்லன்கள் மர்ம முகமூடி மனிதர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். 

அக்கொலைகளைச் செய்வது யார்? என்று கண்டுபிடிப்பதுதான் படம்.

கமலைச் சுற்றியே திரைக்கதை இருந்தாலும் முதல்பாதியில் அவர் வரும் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர் யார்? என்கிற விவரங்களை கமலின் முந்தைய விக்ரம் படத்தோடு இணைத்திருக்கிறார்கள்.

பத்தல பத்தல பாடல் பாதிவரைதான் காட்டுகிறார்கள். அந்தப்பாடலில் நன்றாக நடனம் ஆடுவதுபோல் நடித்திருக்கிறார் கமல். 

சொந்தக் காரணங்களுக்காகப் பழிவாங்குகிறீர்களா? என்றதும் பொங்கி கமல் பேசும் நீண்டவசனம் படத்தின் கதைக்களம் கமலின் நோக்கம் ஆகியனவற்றை வெளிப்படுத்துகின்றன.

துப்பறியும் வேடத்தில் நடித்திருக்கும் ஃபகத்பாசில், அநாயசமாக அந்த வேலையைச் செய்து வரவேற்பைப் பெறுகிறார். அவருக்கும் காயத்ரிக்குமான காட்சிகள் பாலைவனத்தில் சோலை போல அமைந்திருக்கின்றன.

தங்கப்பற்கள் வித்தியாசமான உடல்மொழி, மூன்று மனைவிகள் எனப்பல விசயங்களை விஜய்சேதுபதிக்குக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவும் இல்லாமலே விஜய்சேதுபதி நடித்திருந்தால்கூட குறையொன்றுமிருந்திருக்காது. 

படத்தின் கடைசியில் சிறப்புத்தோற்றத்தில் வரும் சூர்யா ஏமாற்றமளிக்கிறார்.

நரேன், காளிதாஸ், செம்பன் வினோத், சந்தானபாரதி,குமரவேல் உட்பட ஏராளமானோர் படத்தில் இருக்கிறார்கள்.
இவர்களில் வீட்டு வேலைக்கார அம்மா எனும் பெயரில் ஒளிந்திருக்கும் வசந்தியின் விஸ்வரூபம் சுவாரசியம்.

க்ரிஷ்கங்காதரனின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்துக்கேற்ப அமைந்திருக்கிறது.

அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் இரைச்சல் அதிகம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் இருந்த திரைக்கதை நேர்த்தி இதில் குறைவு.
நடிகர்களுக்காகக் காட்சிகள் அமைத்திருக்கிறார். படத்தில் மிகமுக்கியமான விசயமாக நினைத்து வைக்கப்பட்டிருக்கும் தாத்தா பேரக்குழந்தை பாசம் ஒட்டவில்லை.

படம் நெடுக விதவிதமான துப்பாக்கிகள் வைத்து வாணவேடிக்கை காட்டுவது எதற்கு எனத்தெரியவில்லை?

கமலின் ஆளுமை, ஃபகத்பாசிலின் நடிப்பு ஆகியன படத்தைக் காப்பாற்றுகின்றன.

Related Posts