பீட்சா படப்பிடிப்பில் அழுதுவிட்டேன் – 777 சார்லி படநிகழ்வில் கார்த்திக்சுப்புராஜ் தகவல்
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த கன்னட நடிகர் ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு தர்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் கிரண்ராஜ்.கே இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள இப்படம்,
‘சார்லி’ என்ற நாய்க்குட்டி மற்றும் அதன் நண்பன் தர்மாவின் அன்பான கதையை விவரிக்கும் சாகசம் நிறைந்த நகைச்சுவைத் திரைப்படமே 777 சார்லி.
மைசூர், பெங்களூரு, சிக்மங்களூர், கோவா, பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் 777 சார்லி படமாக்கப்பட்டுள்ளது. ராஜ் பி ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை நோபின் பால் அமைத்துள்ளார். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை பிரதீக் ஷெட்டியும் கையாண்டுள்ளனர்.
777 சார்லியை ரக்ஷித் ஷெட்டி மற்றும் ஜி எஸ் குப்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை தமிழில் இயக்குநர், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜும், தெலுங்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டக்குபதியும், மலையாளத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் சுகுமாரனும் வழங்குகிறார்கள்.
அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, ஜூன் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர், பத்திரிகை ஊடக நண்பர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வினில்
சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் கூறியதாவது…
கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காட்டி இதை வெளியிட வேண்டும் என்றார். இந்தப் படத்தில் நடித்த நாய்க்கு சிறந்த விலங்கு நடிகருக்கான விருது வழங்க வேண்டும். இந்தப் படத்தில் ஹீரோவுக்கும், நாய்க்குமான உறவை எப்படி வெளிக்கொண்டு வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது. குழந்தைகளுக்கும், செல்லபிராணி வளர்ப்பவர்களுக்கும் இந்தப் படம் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டி பேசியதாவது…..
இந்தப் படத்தில் கால்நடை மருத்துவராக நடித்துள்ளேன். இந்தப் படத்தை சிறப்பாக எடுக்க முயற்சிக்கும் குழுவில் ஒரு ஆளாக இருக்க விரும்பினேன். நான் கூட இந்தப் படம் எடுக்க முன்வர மாட்டேன். இந்தப் படம் அத்தனை கடினமானது. நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும். இயக்குநர் கிரண்ராஜ், ரக்ஷித் ஷெட்டி அவர்களுக்கு நன்றி. படத்தை வெளியிடும் ஸ்டோன் பெஞ்ச்-நிறுவனத்திற்கு நன்றி.
ஸ்டோன் பெஞ்ச் கார்த்திகேயன் பேசியதாவது……
இந்தப் படத்தை எங்களுக்குப் போட்டுக் காட்டிய போது பிரமித்துப் போனோம். நானும், கார்த்திக் சுப்புராஜும் படத்தைப் பார்த்துவிட்டு எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை எனப் பேசிக்கொண்டோம்.திரைப்படங்கள் மீது பெரிய காதல் இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும். நாங்கள் இந்தப் படத்தைப் பார்த்தவுடன் வெளியிட விரும்பினோம். எங்களுக்கும் இந்தப் படம் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. ரக்ஷித் ஷெட்டி, இயக்குநர் கிரணுக்கு வாழ்த்துகள். ஒரு நாயை இப்படி நடிக்க வைத்தது பெரிய சவாலான விஷயம். சார்லி உடைய நடிப்பு அபாரமாக இருக்கிறது. டப்பிங் பணிகளைப் பார்த்துகொண்ட டப்பிங் குழு இதை ஒரு நேரடித் தமிழ்ப் படம் போல் உருவாக்கியுள்ளனர். எஸ் ஜே சூர்யா சாருக்கு நன்றிக் கூறிகொள்கிறேன். 777 சார்லி – க்கு வாழ்த்துகள் கூறிக்கொள்கிறேன்.
நடிகை சங்கீதா பேசியதாவது…..
செல்லப்பிராணி நாய் உடன் பணிபுரியும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமைப்படுகிறேன். இயக்குநர், தயாரிப்பாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். நீங்கள் படம் பார்த்து ஆதரவு தர வேண்டும்.
இயக்குநர் கிரண்ராஜ் பேசியதாவது…..
நான் செல்லபிராணி விரும்பி, அதனால் தான் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தேன். இந்தப் படத்தில் சவால்கள் நிறைய இருக்கும் எனத் தெரியும். இருந்தாலும் பரவாயில்லை என்று தான் இந்தப் படத்தைத் துவங்கினோம். ரக்ஷித் ஷெட்டி கதையைக் கேட்டு, நாம் கண்டிப்பாக இந்தப் படத்தைச் செய்வோம் எனக் கூறினார். பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் கதையை உருவாக்கு என ரக்ஷித் ஊக்கமளித்தார். நடிகர்கள் ரக்ஷித், ராஜ், சங்கீதா எனப் பலரும் 3 வருடங்களை இந்தப் படத்துக்காகக் கொடுத்துள்ளனர். கன்னடம் போல் மற்ற மொழிகளிலும் திறமையான ஆட்களிடம் இந்தப் படத்தைக் கொடுக்க வேண்டும் என விரும்பினோம். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட முன் வந்தார். அது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. டப்பிங் என்று வரும் போது, தமிழ் டப்பிங் குழு மிகத்திறமையானவர்கள், தமிழ் டப்பிங் கலைஞர் சேகர், ஹீரோவை விட சிறப்பாகப் பேசியுள்ளார். இந்தக் கதையில் எனக்கு இருந்த தெளிவு, தயாரிப்பாளருக்கும் இருந்தது. இந்தப் படத்தை நீங்கள் தமிழில் பார்த்தால், இதை டப்பிங் படம் என்று கூறமாட்டீர்கள், நேரடித் தமிழ்ப் படம் என்று கூறுவீர்கள். இந்தப் படத்தில் நடித்த நாய்(சார்லி)யைத் தேர்ந்தெடுக்க நாங்கள் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தோம். பின்னர் பல நாள் கழித்து இந்த நாயைக் கண்டுபிடித்தோம். நீங்கள் படம் பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது…..
கொரோனாவிற்கு பிறகு, இப்போது தான் சினிமா மீண்டு வருகிறது. எனக்கு எப்போதும் கன்னட திரைத் துறையுடன் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். ரக்ஷித் ஷெட்டி படங்களை முன்பே பார்த்துள்ளேன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இப்படத்தின் ஒரு 15 நிமிடக் காட்சியைப் பார்த்தேன். கேங்ஸ்டர் படமென நினைத்த எனக்கு பெரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். இந்தப் படம் ஒரு பெரிய உணர்வை எனக்குக் கொடுத்தது. நான் இந்தப் படத்தைத் தமிழில் வெளியிட வேண்டும், அதில் நான் இருக்க வேண்டும் என விரும்பினேன். இந்தப் படத்தின் வெற்றி மீது மிக உறுதியாய் இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய திருப்தியைக் கொடுத்த படம். இயக்குநர் கிரண்ராஜ்க்கு இது முதல் படம் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. நாயை நடிக்க வைப்பது கஷ்டமான விஷயம்.
பீட்சா படம் எடுக்கும்போது ஒரு நாள் நாயை வைத்துப் படமாக்கவேண்டும். திட்டமிட்டபடி அது நடக்கவில்லை. அன்று நான் அழுதேவிட்டேன். கடைசியில் அந்த நாய் காட்சி வேண்டாமென்று தூக்கி விட்டோம். இப்படத்தை எப்படி எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இந்தப் படத்தின் கதை நிச்சயமாக கூறப்பட வேண்டிய கதை. இந்த படம் பார்த்த பின்னர் வாழ்கை மேல் ஒரு நம்பிக்கை வரும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. உங்களுடைய ஆதரவு எங்களுக்குத் தேவை. படம் பார்த்துவிட்டுக் கூறுங்கள் நன்றி
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது……
நான் நல்லவனாக வலம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவருக்கு நன்றி. இப்படத்தை விட படத்தில் பணியாற்றிய நாய், படக்குழு மற்றும் இயக்குநருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இயக்குநர் உடைய ஆர்வம் தான் இந்தப் படத்தை அவரை எடுக்க வைத்திருக்கிறது. படம் சிறிய பட்ஜெட் என நினைத்தேன், ஆனால் இந்தியாவின் பல இடங்களில் படத்தைப் பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். இந்த நாய் (சார்லி) ஒரு பெரிய நடிகனாய் நடித்துள்ளான். படத்தின் காட்சிகளில் அது கொடுத்த உணர்வுகள் அபாரமாக உள்ளது. 777 சார்லி ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட படம். ஸ்டோன் பெஞ்ச் மூலமாக இந்தப் படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி. அவர்கள் நல்ல படங்களைத் தவறவிடமாட்டார்கள். இந்தப் படம் தமிழுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ரக்ஷித் சாருடைய அர்பணிப்பை நான் பாராட்டுகிறேன். தமிழக மக்கள் 777 சார்லி க்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் ரக்ஷித் ஷெட்டி கூறியதாவது…..
இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பான படைப்பு . சார்லி 777 என் வாழ்கையில் பல விஷயங்களை மாற்றியது. 1 1/2 வருடத்திற்கு முன்னரே படம் முடிந்துவிட்டது. நான் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளேன், அதனால் படத்தை ஒடிடிக்கு அனுப்பலாமா என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நான் படத்தை முழுமையாகப் பார்த்தபிறகு, என்ன நடந்தாலும் படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். படத்தைப் பார்த்த பிறகு கிடைக்கும் அனுபவம் விலைமதிப்பற்றது. எல்லாப் படங்களும் பான் இந்தியா படங்கள் இல்லை என எங்களுக்குத் தெரியும். ஆனால் பான் இந்தியா படமாக மாற முழு அம்சமும் இந்தப் படத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தக் குழுவும் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் முதலில் இணைந்த நிறுவனம் ஸ்டோன் பெஞ்ச். ஸ்டோன் பெஞ்ச் எப்பொழுதும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும். அவர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தாருங்கள் நன்றி.
இரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 777 சார்லி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.











