ஹாஸ்டல் – திரைப்பட விமர்சனம்
கல்லூரி விடுதியில் நடக்கும் மாணவர்களின் காமெடி கலாட்டாதான் இந்த ‘ஹாஸ்டல்’.
கல்லூரி மாணவனான அசோக் செல்வன் விடுதியில் தங்கிப்படிக்கிறார். அந்த விடுதியின் பொறுப்பாளர் நாசர். காவலாளி ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ்.
மாணவர்கள் மட்டுமே தங்கும் அந்த விடுதியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு உதவி செய்தால் பணம் தருகிறேன் என்று சொல்லி அசோக் செல்வனிடம் உதவி கேட்கிறார் ப்ரியா பவானி சங்கர்.
பணச் சிக்கலில் விழி பிதுங்கி நிற்கும் அசோக் செல்வனுக்கு வழி கிடைச்சதால் சம்மதம் தெரிவித்து ப்ரியா பவானி சங்கரை விடுதிக்கு அழைத்துச் செல்கிறார். பொழுது விடிவதற்குள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்ற திட்டமிடலுடன் உறங்குகிறார் ப்ரியா.
தூங்கி வழிந்த காரணத்தால் ப்ரியாவால் நினைத்தப்படி விடுதியிலிருந்து வெளியேற முடியவில்லை. இதற்கிடையே விடுதிக்குள் பெண் இருக்கிறார் என்று சொல்லும் ராம்தாஸின் பேச்சை நம்ப மறுக்கும் நாசர் விடுதியை சோதனை செய்ய முடிவு செய்கிறார். அதிலிருந்து ப்ரியாவை தப்பிக்க வைக்க அசோக் செல்வனும் அவருடைய நண்பர்களும் முயற்சி செய்கிறார்கள். மாணவர்களின் முயற்சிக்குப் பலன் கிடைத்ததா, இல்லையா? என்பதை நகைச்சுவையோடு சொல்வதுதான் கதை.
மாணவன் வேடத்துக்கு அசோக் செல்வன் கச்சிதமாக இருக்கிறார். நடனம், நடிப்பு என சகலத்திலும் சலிப்பு தட்டாதளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார். சில இடங்களில் முகபாவங்களில் வித்தியாசம் காண்பிக்கிறேன் என்ற பெயரில் சிவகார்த்திகேயனை ஞாபகப்படுத்துகிறார்.
ப்ரியா பவானி சங்கர் நடுத்தர படங்களின் நயன்தாராவாக வந்து ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொள்கிறார். காதல் காட்சி இல்லையென்றாலும் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார்.
நண்பராக வரும் சதீஷ், நாசர், ராம்தாஸ் ஆகியோர் பாத்திரம் அறிந்து மிகையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நகைச்சுவை வில்லனாக வரும் ரவிமரியா நகைச்சுவைக் காட்சிகளில் தனி ஆவர்த்தனம் செய்கிறார். தன்னுடைய அடியாட்களைக் கையாளும் காட்சி, சண்டைக் காட்சி என கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திச் சிரிக்க வைக்கிறார்.
விடுதியில் நடக்கும் கதையாக இருந்தாலும் அழகான படப்பிடிப்பால் சடுகுடு ஆடி அசரடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் ப்ரவீன் குமார்.
நகைச்சுவைக் கதைக்குத் தேவையான துள்ளலான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ‘போபோ’ சசி. பாடல்கள் அனைத்தும் மீண்டும் கேட்கும் ரகம். தேவா பாடியுள்ள ‘வச்சா மேல’ பாடல் கானா இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும்.
படம் பார்க்க வரும் இரசிகர்களை மகிழ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படம் எடுத்திருக்கும் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் அதில் வெற்றி அடைந்துள்ளார்.
– சதீஷ்











