அஜீத் கேட்ட சம்பளம் வணங்கி வழியனுப்பிய நிறுவனம் – ஏகே 62 பட சுவாரசிய தகவல்
அஜீத் நடிக்கும் 61 ஆவது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில், அஜீத் நடிக்கும் 62 ஆவது படக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 18,2022 அன்று வெளியானது. அதன்படி அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விக்னேஷ்சிவன் இயக்குகிறார்.
முன்னதாக, அஜீத்தின் 62 ஆவது படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன.
திடீரென லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜீத் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வந்ததெப்படி? என்கிற கேள்வி எழுந்தது.
அதற்கான விடை இதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..
அடுத்த படத்துக்கான சம்பளம் நூறுகோடி என்று அஜீத் சொல்லியிருக்கிறார். அதற்கு சத்யஜோதி நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
ஏற்கெனவே அஜீத் நடித்த நேர்கொண்டபார்வை மற்றும் வலிமை ஆகிய படங்கள் பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ளன. அப்படங்களில் அஜீத்தின் சம்பளம் ஐம்பதுகோடி என்கிறார்கள். அதிலேயே நட்டம் என்றால் நூறு கோடி சம்பளம் கொடுத்தால் கண்டிப்பாகப் மிகப்பெரிய நட்டத்தைச் சந்திக்கவேண்டும் எனவே எங்களால் அவ்வளவு தரவியலாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம்.
அதேசமயம் லைகா நிறுவனம் நூறுகோடி சம்பளம் தர ஒப்புக்கொண்டதாம். அதனால் அந்நிறுவனத்துக்குப் படம் நடிக்கிறேன் என்று அஜீத் சொல்லியிருக்கிறார்.
உடனே அவரை வணங்கி வழியனுப்பிவைத்துவிட்டதாம் சத்யஜோதி நிறுவனம்.
அதன்பின் லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதாகச் சொல்கிறார்கள்.











