செய்திக் குறிப்புகள்

பணம் பற்றிக் கவலை இல்லாமல் இயக்குங்கள் – இயக்குநர் பாலா கொடுத்த சுதந்திரம

இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன்.

மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் எம்.பத்மகுமார் தமிழ்ப்பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 22,2022 அன்று நடைபெற்றது. 

இவ்விழாவினில்   

தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் முரளி பேசியதாவது…..

சுரேஷ் இந்தப்படத்திற்கு எவ்வளவு உழைத்துள்ளார் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். பாலா சார் தயாரித்த பிசாசு படத்தை நாங்கள் தான் வெளியிட்டோம். தரமான படமாகவும் வசூல் குவித்த படமாகவும் இருந்தது. அதே போல் இந்தப் படமும் இருக்கும். ஜீவி பிரகாஷ் இசை எப்போதும் மனதை சாந்தப்படுத்தும் இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். நன்றி.

நாயகி மது ஷாலினி பேசியதாவது…..

இந்த பாத்திரத்தை எனக்குத் தந்ததற்காக, பத்மகுமார் சாருக்கு முதல் நன்றி. ஆர்.கே.சுரேஷ் சார் இந்தப் படத்தில் பல தோற்றங்களில் வந்திருக்கிறார், ஒரு படத்தில் வேறு வேறு தோற்றத்தில் தோன்றுவது கடினம் ஆனால் அவர் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஜீவி இசை அருமையாக இருக்கிறது. பாலா சார் என்னை ஞாபகம் வைத்து அழைத்து வாய்ப்புத் தந்ததற்கு நன்றி சார், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.

இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது…..

ஆர்.கே.சுரேஷ் அப்பாவிடம் படம் எடுப்பதற்காகக் கதை சொல்லியுள்ளேன். ஆனால், அவர் சாமி படம் தான் எடுக்கப் போறேன், இந்தக்கதை எடுக்க முடியாது என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார். ஆனால், அதன் பிறகு தான் அவர் வள்ளல் என தெரியவந்தது. பின் அவர் மகன் என் படமான தர்மதுரை படத்தை எடுத்து, என்னைப் புகழ் பெறச் செய்தார்.

தந்தை இல்லாத மகனுக்கு தமையனே தந்தையாக அவரைப் பார்த்துக்கொள்கிறார் அண்ணன் பாலா. உங்களுக்குக் கிடைக்கும் ஆசிர்வாதம் எல்லாம் உங்கள் தந்தையின் புண்ணியம் தான். ஒரு வில்லனை நாயகனாக ஆக்குவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இந்தப்படத்தை பார்க்கும் போது சுரேஷின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது அவருக்கு நடிப்பு சிறப்பாக வருகிறது. அவர் அதைக் கெட்டியாகப் பிடித்துகொள்ள வேண்டும். இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார்.ஜீவி பிரகாஷ் இசை கேட்க அற்புதமாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நான் நம்புகிறேன். நன்றி.
 
ஜீவி பிரகாஷ் பேசியதாவது…..

பாலா சாரின் பி ஸ்டுடியோஸ் உடன், வேலை பார்க்கும் மூன்றாவது படம். என்னை கமிட் பண்ணும் போது ஜோசப் பற்றி எனக்குத் தெரியாது. அதன் பிறகு தான் பார்த்தேன் பத்மகுமாரின் இயக்கம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவரது காட்சிகளைப் பார்த்துதான் இசையமைத்தேன். சுரேஷ், பூர்ணா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள், இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். 

நடிகை பூர்ணா பேசியதாவது…..

ஒரு இடைவேளைக்குப் பிறகு ஒரு நல்ல படத்தில் வருவது மிக சந்தோஷமாக இருக்கிறது. பாலா சார் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி ஆனால் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும், பாலா சார் வாய்ப்பு தாருங்கள். ஜோசப் மலையாளத்தில் ஒரு மைல்கல் படம் பத்மகுமார் அட்டகாசமாக இயக்கியிருந்தார். அவர் எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்புத் தந்ததற்கு நன்றி. சுரேஷ் இந்தப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார், அவர் நடிப்பால் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். ஜீவி இசையில் நடிக்க வேண்டும் என்பது ஆசை இந்தப்படத்தில் இரண்டு பாடலில் நடித்துள்ளேன், அனைவருக்கும் நன்றி. 

இயக்குநர் பத்மகுமார் பேசியதாவது…..

என் வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாள். சென்னையில் உதவி இயக்குநர் வாய்ப்புக்காக அலைந்த நாளில், என் படத்திற்காக மேடை ஏறுவேன் என நான் நினைக்கவில்லை. அதற்கு இரண்டு பேருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பாலா சார் மற்றும் நடிகன் சுரேஷ் இருவருக்கும் பெரிய நன்றி. இந்தப்படம் இரண்டு வருட பயணம் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகர் தயாரிப்பாளர் சுரேஷ் பேசியதாவது……

என் தந்தை, என் அம்மா, என் தந்தைக்கு அடுத்து என்னை கை தூக்கி அழைத்து செல்லும் பாலா அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி. 13 வருசமா நான் திரைத்துறையில் இருக்கிறேன். பத்திரிகைகள் எனக்கு நிறைய ஆதரவு தந்துள்ளார்கள். இப்போது திரையரங்குகள் முழுக்கத் திறந்த பின் என் பட விழா நடப்பது மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் முன்னால் நான் நடிகனாக மாறி வந்துள்ளேன். ஜோசப் படம் பார்த்துவிட்டு, அது என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது, பாலா அண்ணனிடம் போய்ச் சொன்னேன், இது நல்ல படம் ஆனால் இந்தப்படத்திற்கு நிறைய முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார். இந்தப்படத்திற்காக உடல் எடை ஏற்றினேன். நிறைய உழைத்தேன். உழைத்தால் தான் சினிமா அங்கீகாரம் தரும். பாலா அண்ணன் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார்களை இயக்கிய பத்மகுமார் சார் இயக்கத்தில் நடிப்பது வரம். என் படக்குழுவினருக்கு நன்றி. ஜீவியின் ரசிகன். அவரது இசைக்கு நன்றி எல்லோருக்கும் நன்றி. 

தயாரிப்பாளர், இயக்குநர் பாலா பேசியதாவது…….

வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்த ரீமேக் பண்ணலாம் என்ற போது சுரேஷ், நான் பண்றேன் அண்ணா என்றான். அப்ப அதே டைரக்டரை அழைப்போம் என அவரைக் கூப்பிட்டு நீங்கள் அங்கே செய்ய முடியாததை, பணம் பற்றிக் கவலை இல்லாமல் பண்ணுங்கள் என்றேன். அவரும் மலையாளப் படத்தை விட இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார். இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் அதை அவன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், படம் நன்றாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி. 

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts