ராஜவம்சம் – திரைப்பட விமர்சனம்
சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர்.
அவருக்குத் திருமணம் செய்ய வீட்டார் முடிவெடுக்கிறார்கள். அந்நேரம்,உலகத்தை மிரட்டும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய யோசனைக்குச் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய வேலை அவருக்கு வருகிறது.
இந்த வேலைதான் முக்கியம், திருமணம் பிறகுதான் என முடிவெடுக்கிறார். ஆனால், அம்முடிவைத் தைரியமாக வீட்டில் உள்ளோரிடம் சொல்ல முடியவில்லை.
அதற்காக ஒரு நாடகம் ஆடுகிறார். அது என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதுதான் படம்.
சசிகுமாரின் தோற்றத்தில் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஆனால் வழக்கமான உடல்மொழியை அவரால் விடமுடியவில்லை. சண்டைக்காட்சிகளில் நல்ல முன்னேற்றம்.
நாயகியாக நிக்கிகல்ராணி. கொடுத்த வேடத்துக்கு நியாயமாக நடித்திருக்கிறார்.
நகைச்சுவைக்கு சதீஷ், தம்பிராமய்யா, யோகிபாபு ஆகியோர் இருக்கிறார்கள். அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.
விஜயகுமார் சுமித்ரா தம்பதிகளின் தலைமையில் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு வசனம், ஆளுக்கு ஒரு காட்சி வைப்பதற்கே இயக்குநர் திண்டாடியிருக்கிறார்.
இவர்கள் போதாதென ராதாரவி தலைமையில் ஒரு குடும்பம். அவர்க்ளும் கூட்டம் கூட்டமாக வந்து போகிறார்கள்.
சித்தார்த்தின் ஒளிப்பதிவு தேவையான அளவு இருக்கிறது. கிராமத்தைக் காட்சிப்படுத்தும்போது உற்சாகம் கொண்டிருக்கிறது அவருடைய ஒளிப்பதிவுக்கருவி.
சாம்சிஎஸ் இசையில் பாடல்கள் கேட்கும் வகை. பின்னணி இசையும் தாழ்வில்லை.
புவிவெப்பமயமாதல் எனும் உலகச்சிக்கல், கூட்டுக்குடும்பம் பற்றிய பெருமை ஆகியனவற்றோடு சேர்த்து ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் கே.வி.கதிர்வேலு.
மையக்கதை வலுவின்றி இருப்பதும் சசிகுமார் நிக்கிகல்ராணி திருமணம் நம்ப முடியாததாக இருப்பதும் பலவீனம்.











