ஆபரேசன் ஜுஜுபி – திரைப்பட விமர்சனம்
ஏற்கனவே பல அரசியல் திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், சற்று வித்தியாசமான அரசியல் படமாக உருவாகியிருக்கிறது ‘ஆபரேஷன் ஜுஜுபி’ (Operation JuJuPi).
அனைவரும் புரிந்து கொள்ளும் இந்திய ஆங்கிலப் படமாக வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகராக வலம்வரும் சாம்ஸ், இந்தப்படத்தில் கதையின் நாயகன்.
அவர், இந்த நாட்டின் சிஸ்டம் சரியில்லை என்று கவலைப்படுகிறார். இது குறித்து தனது நண்பர்களிடம் அவர் சொல்லும் போது, ”உனக்கு தான் பிரச்சனை, மருத்துவரைப் பாரு”, என்று அவருக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
திடீரென்று சாம்ஸ் முன்பு கடவுள் தோன்றி அவர் பிரச்சனை குறித்து கேட்பதோடு, அவரிடம் ஜுஜுபி என்ற அதிசய பானத்தையும் வழங்குகிறார்.
அந்தப்பானத்தைப் பருகும் சாம்ஸ், நாட்டையே மாற்றும் அளவுக்கு ஒரு கனவு காண, அந்த கனவு மூலம் அரசியல் உலகில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. அது என்ன என்பது தான் படம்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சாம்ஸ், தன்னால் சீரியஸான கதாப்பாத்திரங்களையும் கையாள முடியும், என்பதை மிக நேர்த்தியாக நிரூபித்திருக்கிறார்.
சாம்ஸின் மனைவியாக நடித்திருக்கும் வினோதினி மற்றும் மகளாக நடித்த நடிகை தங்களது வேலைகளைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். வினோதினி அவ்வபோது நம்மை சிரிக்க வைக்கவும் செய்கிறார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாக நடித்திருக்கும் வையாபுரி, வெங்கட் சுபா, இயக்குநர் சந்தானபாரதி, படவா கோபி, ஜெகன், மனோபாலா என முன்னணி காமெடி நடிகர்கள் அனைவரும், காமெடி என்ற தங்களது அடையாளத்தை காட்டாமல், கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
பிரதமராக நடித்திருக்கும் ராகவின், திட்டங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கிறது. அவரது ஆங்கில உச்சரிப்பு நன்று.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதிய இடங்களைத் தேடிப் பிடித்துப் படமாக்கியிருக்கிறார்.
ஆங்கிலப் படமாக இருந்தாலும், அனைத்துத் தரப்பினருக்கும் கதை புரியும்படி மிக கச்சிதமாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வினோத் ஸ்ரீதர்.
கதை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் அருண்காந்த், இசை, கலர் மிக்ஸிங், ஒலி கலவை உள்ளிட்ட 14 பணிகளை ஒருவராகவே செய்திருக்கிறார்.
காட்சி ஊடகம் என்பதை மறந்து வானொலி நாடகம் போல் படம் நெடுக வசனங்களில் கடத்தியி்ருப்பது பெரும் பலவீனம்.
ஒரு நாடு முன்னேற்றம் அடைவது மட்டும் முன்னேற்றம் அல்ல, அந்த நாட்டு மக்கள் சந்தோஷமாக இருப்பது தான் உண்மையான முன்னேற்றம் என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய இயக்குநர் அருண்காந்த் முயன்றிருக்கிறார்.











