ரஜினி படத்தால் சிக்கல் – எனிமி தயாரிப்பாளர் பேச்சும் அதற்கு பதிலும்
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி நாள். அதையொட்டி ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்விரு படங்களில் அண்ணாத்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அண்ணாத்த படத்தை மட்டும்தான் திரையிட வேண்டும் என்று வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் வெளியிட்டுள்ள ஒரு குரல்பதிவில், ஓடிடி தளத்தில் எங்கள் எனிமி படத்தை வெளியிட நல்ல வாய்ப்பு இருந்தபோதும் திரையரங்குகளில்தான் படத்தை வெளியிடவேண்டும் என்கிற உறுதி எடுத்தோம். அதன்படி நவம்பர் 4 தீபாவளி நாளில் திரைக்கு வரவிருக்கிறோம். ஆனால் எங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்கிற சூழல் இருப்பதாக அறிகிறேன்.
இதனால், நான் சார்ந்திருக்கும் சங்கம் சார்பானவர்கள் எங்களுக்கு 250 திரையரங்குகள் கிடைக்க உதவவேண்டும்.
தீபாவளி போன்றதொரு பெரிய பண்டிகையின்போது இரண்டு படங்கள் வந்தாலும் இரண்டும் இலாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் 900 திரையரங்குகளில் திரையிட்டால் இரண்டாவது நாளே கூட்டம் குறைந்துவிடும் என்பதுதான் எதார்த்தம்.
இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.
அவர் நேரடியாக அண்ணாத்த படத்துக்கு 900 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள் எங்களுக்கு நூற்றுச்சொச்சம் திரையரங்குகள்தாம் கிடைக்கும்போல் தெரிகிறது என்று சொல்லவில்லையென்றாலும் அவர் பேச்சின் சாரம் அதுதான்.
அவருடைய இந்தக் குரல்பதிவு திரையுலகினரிடையே வேகமாகப் பரவி வரும் நிலையில், திருப்பூரைச் சேர்ந்த மோகன்ராஜ் எனும் திரையரங்கு உரிமையாளர் வெளியிட்டுள்ள குரல்பதிவில்,
எனக்கு கோவை மற்றும் திருச்சி ஆகிய விநியோகப் பகுதிகளில் திரையரங்குகள் இருக்கின்றன. இவ்விரு பகுதிகளிலும் நீங்கள் குற்றம் சாட்டுகிற மாதிரி பெரும்பாலான திரையரங்குகளை அவர்கள் ஒப்பந்தம் செய்வதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி 250 அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகள் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
இவ்விரு குரல்பதிவுகளால் திரையுலகினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.











