நள்ளிரவில் நடந்த சந்திப்பு – இந்தியன் 2 பட சிக்கலில் சுமுகமுடிவு
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள். எல்லாவற்றையும் தாண்டி படப்பிடிப்பு தொடர்ந்துகொண்டிருந்தபோது ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது.
அதன்பின் கொரோனா சிக்கல் தொடங்கியதால் இந்தியன் 2 படமும் அதில் மாட்டிக்கொண்டது. அதனால் படப்பிடிப்புக்கு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
படத்தின் செலவுத்தொகை அளவுக்கதிகமாகப் போய்க்கொண்டே இருக்கிறதென்கிற சிக்கல் உருவானது. பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் சுமுகமுடிவு எட்டப்படவில்லை.எனவே, ராம்சரண் நடிக்கும் தெலுங்குப்படம் மற்றும் ரன்வீர்சிங் நடிக்கும் இந்திப்படம் ஆகியனவற்றை இயக்க ஒப்புக்கொண்டு அதன் வேலைகளில் ஈடுபடத்தொடங்கினார்.
அதனால், ஷங்கர் மீது சென்னை உயர்நீதிமன்றம்,ஐதராபாத் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஷங்கர் மீது வழக்குத் தொடர்ந்தது லைகா நிறுவனம்.
இச்சிக்கல் நீண்டுகொண்டே போய்க்கொண்டிருந்தது. இப்போது அச்சிக்கலுக்குச் சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளதாம்.
சென்னை வந்திருக்கும் லைகா நிறுவனர் சுபாஷ்கரனை, மனைவி மற்றும் மேலாளருடன் சென்று சந்தித்திருக்கிறார் ஷங்கர்.
நள்ளிரவில் நடந்த இச்சந்திப்பின்போது எல்லா விசயங்களும் பேசப்பட்டு கடைசியில் சுமுக நிலை உருவாகிவிட்டதாம்.எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிடுவதாக ஷங்கர் உறுதியளித்தாராம்.
இதன்படி, ஷங்கர் மீது லைகா நிறுவனம் போட்டிருக்கும் எல்லா வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று சொல்லிவிட்டார்களாம்.
விரைவில் இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
நல்லது நடக்கட்டும்.











