உதயநிதியின் புதிய மற்றும் கடைசி திரைப்படம்
உதயநிதி இப்போது மகிழ்திருமேனி இயக்கும் படம், ஆர்ட்டிகள் 15 என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்று, மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைதவிர அதியமான் இயக்கத்தில் ஒரு படம் பாதியில் நிற்கிறது.
இந்நிலையில், அவர் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். ஆனது மட்டுமல்ல நாள்தோறும் மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இதனால் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் படப்பிடிப்புகளுக்காகத் தேதிகள் ஒதுக்குவதிலேயே பல மாற்றங்கள் நடக்கின்றன என்கிறார்கள்.
அதனால், இனி தொடர்ந்து திரைப்படங்களில் அவர் நடிக்கமாட்டார் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், இப்போது இருக்கும் படங்களுக்குப் பிறகு இன்னுமொரு படத்தில் நடிக்க உதயநிதி ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில்தான் அவர் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அவர், இப்போது துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படமொன்றை இயக்கவிருக்கிறார். அப்படத்தை முடித்தவுடன் உதயநிதி நடிக்கும் படத்தை இயக்குவாராம்.
அதற்குள், உதயநிதி இப்போது நடித்துக் கொண்டிருக்கும் எல்லாப்படங்களையும் முடித்துவிடுவாராம்.
சட்டமன்ற உறுப்பினர் ஆனதோடு தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பதால் தொடர்ந்து நடிக்கப்போகிறாரா? என்கிற கேள்வி எழுகிறது.
அதற்கு விடை, மாரி செல்வராஜ் இயக்கும் படம்தான் அவருடைய கடைசி திரைப்படமாக இருக்கும். அதன்பின் முழுநேர அரசியல்தான் என்கிறார்கள்.











