விமர்சனம்

முன்னா – திரைப்பட விமர்சனம்

சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா? நாடோடி வாழ்க்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நாகரீக வாழ்கையில் அவனுக்குக் கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கான விடைதான் “முன்னா“

படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன். நாடோடிகளாக வாழும் கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கையைத் திரையில் பதிவு செய்திருப்பதோடு அவர்களிடம் இருக்கும் நேர்மை மற்றும் நற்பண்புகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் நியா கிருஷ்ணன்,எடுப்பான அழகால் கவனிக்க வைக்கிறார். காதல் மற்றும் நடனக் காட்சிகளில் நன்றாகச் செய்திருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் ராஜு, அம்மாவாக நடித்திருக்கும் சிந்து, நாயகனின் மனைவி ரம்யா உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் நடன இயக்குநர் கென்னடி படம் சலிப்பில்லாமல் நகர உதவியிருக்கிறார். அவருடைய நடனங்கள் நன்று.

ஒளிப்பதிவாளர் ரவி கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

டி.ஏ.வசந்தின் இசையில் பாடல்கள் நன்று.பாடல் வரிகள் கவனித்துக் கடைபிடிக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன. சுனில் லாசரின் பின்னணி இசை அளவு.

தெருக்கோடி வாழ்க்கை நடத்துகிறவர்களுக்குக் கிடைக்கிற பணமே போதும் என்ற மனசு இருக்கும். நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது, நிம்மதியும் இருக்காது என்கிற ஆழமான கருத்தைச் சொல்லப் படமெடுத்திருக்கிறார் இயக்குநர்.

திரைக்கதை மற்றும் பட உருவாக்கத்தில் பல குறைகள் இருந்தாலும் மக்களிடம் நல்ல கருத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் பாராட்டுக்குரியது.

Related Posts