வலிமை தமிழக உரிமை – மதுரை அன்பும் ராகுலும் பெற்றது எப்படி? எவ்வளவு தொகை?
நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
மே 1 ஆம் தேதி அஜித்தின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல்பார்வை வெளியாகும் என்றும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு (மார்ச் 29) வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வெளீயிட்டுள்ள அறிவிப்பில், எங்கள் வலிமை படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் கோபுரம் சினிமாஸ் (மதுரை அன்பு) ஆகியோருக்குக் கொடுத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
நேர்கொண்டபார்வை படத்தை வெளீயிட்டவர்களில் இந்த ராகுலும் ஒருவர். அந்தப்படத்தின் வரவு செலவில் போனிகபூர் ராகுலுக்குப் பணம் தரவேண்டுமாம்.
அதனால், இந்தப்படத்தையும் ராகுலுக்கே கொடுத்திருப்பதோடு படத்துக்காக ஏற்கெனவே வாங்கிய தொகைக்காக மதுரை அன்புவை இதில் சேர்த்ததாகவும் சொல்கிறார்கள்.
தமிழக திரையரங்கு உரிமைக்கான தொகை சுமார் அறுபது கோடி என்றும் சொல்கிறார்கள்.
இதுகுறித்து மதுரை அன்புவிடம் கேட்டால், வலிமை படத்துக்கு நாங்கள் திரையரங்குகள் எடுத்துத்தருகிறோம் அவ்வளவுதான் என்கிறார்.












