October 17, 2026
சினிமா செய்திகள்

சூர்யா படத்தைத் திரையிடமாட்டோம் – திரையரங்கினர் போர்க்கொடி

அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.

இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ‘வா செல்லம்’,’கலைகிறதே கனவே’ ஆகிய பாடல்கள் வெளீயாகியிருக்கின்றன.

இப்படம் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று எண்ணிய நிலையில் கொரோனா காரணமாக வெளியீட்டுத் தேதி தள்ளிப்போயிருக்கிறது.

இந்நிலையில், திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பே நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்துவிட்டார்களாம்.

அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள்.

வெளியாகாத ஒரு படத்துக்கு இவ்வளவு விலை கிடைத்திருக்கிறது என்பது பெரும் வியப்பு என்பதோடு, இந்த விலை என்றால் பாதிக்குப் பாதி இலாபம் கிடைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது இந்தப்படத்தின் மொத்தச் செலவு சுமார் நான்கரை கோடி என்றும் அதே அளவு இலாபம் கிடைத்திருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.

இது தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு இலாபம் என்றாலும் எதிர்காலம் குறித்த அச்சத்தின் பிடியில் இருக்கும் திரைத்துறையை மேலும் நசுக்கும் செயல் என்கிற விமர்சனங்களும் வந்தன.

இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.
இதனால் அவர்கள் ஒன்றுகூடி சூர்யாவுக்கு எதிரான முடிவை எடுக்கவிருக்கிறார்களாம்.

அதன்படி இனிமேல் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்கிற முடிவை எடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் உடனடியாக சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் சூரரைப்போற்று படத்துக்குச் சிக்கல் என்கிறார்கள்.

அப்படம் உடனடி வெளீயீட்டுக்குத் தயாராக இருக்கிறது. அப்படம் தொடர்பாக வியாபாரங்களும் பேசி முடிக்கப்பட்டிருக்கின்றன. அவை எல்லாம் சிக்கலுக்குள்ளாகும் என்கிறார்கள்.

இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts