குட்டி ஸ்டோரி – திரைப்பட விமர்சனம்
கெளதம் மேனன் இயக்கி நடித்துள்ள ‘எதிர்பாரா முத்தம்’,ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘அவனும் நானும்’,வெங்கட்பிரபுவின் ‘லோகம்’,நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘ஆடல்-பாடல்’ ஆகிய நான்கு படங்கள் வரிசையாக வருவதுதான் குட்டி ஸ்டோரி.
இவற்றில் முதலில் வருவது கெளதம்மேனனின் எதிர்பாராமுத்தம். கெளதம்மேனன் அமலாபால், ரோபோ சங்கர், கெளதம்மேனனின் இளவயதாக வினோத்கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பேசுவதில் முக்கால்வாசி ஆங்கிலம் கலந்து பேசுவதான வேடத்துக்கு கெளதம்மேனன் சரியாக இருக்கிறார். இரண்டு பருவங்களிலும் அமலாபாலே நடித்திருக்கிறார்.வினோத்கிஷனுடன் பேருந்தில் பயணிக்கும் காட்சி, வீட்டில் நடக்கும் நிகழ்வு ஆகியனவற்றோடு காதல் போயின் இன்னொரு காதல் என்று வாழ்ந்த கெளதம் மேனனால் தான் இழந்ததைப் பற்றி அமலாபால் சொற்களிலும் பாவனையிலும் வெளிப்படுத்தும் இடம் ஆகியன சிறப்பு.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, கார்த்திக்கின் இசை, பிரதீப் ராகவின் படத்தொகுப்பு ஆகியன அளவாக அமைந்திருக்கின்றன.
அடுத்து வருவது, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ் நடித்த அவனும் நானும்.மேகா ஆகாஷ் பொருத்தமாக நடிக்க முயன்றிருக்கிறார்.
விடுதி அறையில் நடப்பவை அதன்பின் நடக்கும் எதிர்பாரா நிகழ்வு ஆகியன படபடப்பை ஏற்படுத்துகின்றன. முடிவு முழுமையான நாடகத்தனம்.
மதுவின் இசை, அரவிந்த் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொக்குப்பு ஆகியவை படத்துக்குப் பலம்.
மூன்றாவதாக இடம்பெற்றிருப்பது வெங்கட் பிரபு இயக்கிய ‘லோகம்`.வீடியோ கேமை மையமாகக் கொண்டு ஒரு காதலைச் சொல்லியிருக்கிறார். வருண், சங்கீதா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.சக்தி சரவணன் ஒளிப்பதிவு பிரேம்ஜிஅமரன் இசை ஆகியன நன்று.
வருண் நன்றாக நடித்திருக்கிறார். டக்கென கண்கலங்கும் இடத்தில் நடிப்பிலும் முன்னேறியிருக்கிறேன் என்று காட்டியிருக்கிறார். சாக்ஷி அகர்வாலைக் காட்டி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில அதை மாற்றுகிறார் வெங்கட்பிரபு. அந்த மாற்றம் சரியாக அமையவில்லை என்பது ஏமாற்றம்.
இறுதியாக இடம்பெற்றிருப்பது ஆடல் பாடல். நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி அதிதிபாலன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இரண்டு பேரை மட்டும் வைத்துக் கொண்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நலன் குமாரசாமி. இருவருமே நன்றாக நடித்து வேடங்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். விஜய்சேதுபதி கிடைத்த கொஞ்ச நேரத்தில் விதவிதமாக உடைகள் அணிந்து ஸ்டைலாக இருக்கிறார்.
பாலின சமத்துவத்தை மையக்கதையாகவும் புத்திசாலித்தனமாக மனைவியை ஏமாற்றுவதாக நினைக்கும் கணவர்களை எச்சரிக்கும் திரைக்கதையையும் கொண்டிருக்கிறது.
ஹெட்வின் லூஸ் விஸ்வநாத் பின்னணி இசை காட்சிகளுக்குப் பலம். சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவில் விஜய்சேதுபதியும் அதிதியும் கூடுதல் அழகாக இருக்கிறார்கள்.
கதைகளில் குட்டி கருத்துகளில் கெட்டி.











