சினிமா செய்திகள்

இபிகோ 306 படத்தில் அன்புமணி இராமதாசுதான் வில்லனா? – இயக்குநர் சாய் பேட்டி

சனவரி 22 ஆம் தேதி எம் எக்ஸ் ப்ளேயர் இணையத்தில் வெளியான படம் இபிகோ 306. மருத்துவர் சாய் எழுதி இயக்கி முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தப்படம் சமுதாய அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

தேவையின்றித் திணிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு காரணமாக மாணவி அனிதா பலியான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

அப்படத்தை எழுதி இயக்கியதோடு அரசியல் தலைவர், மன நலம் பாதிக்கப்பட்டவர் ஆகிய இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் மருத்துவர் சாய் உடன் ஓர் உரையாடல்….

1. இந்தப்படம் எடுக்க வேண்டும் என்று தோன்றியது எப்படி?

என் சொந்த ஊர் திருச்சி. நான் 2016 இலிருந்து 2019 வரை மருத்துவம் படித்தவன். 2017 ஆம் ஆண்டு நடந்த அனிதாவின் மரணம் என்னைக் கடுமையாகப் பாதித்தது. அதன் விளைவாகவே இந்தப்படத்தை எடுத்தேன்.

2. மருத்துவர் திரைப்பட இயக்குநர் ஆனது எப்படி?

மருத்துவம் படிக்கச் செல்லுமுன்பே குறும்படங்கள் இயக்கி அகில் இந்திய அளவில் பரிசுகள் பெற்றிருக்கிறேன். அந்த அனுபவங்களைக் கொண்டு இந்தப்படத்தை எடுத்தேன்.

3. இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தது பற்றி…

மனநலம் குன்றியவராகவும் அரசியல் தலைவராகவும் நானே நடித்தேன். படம் வெளியான பின்பு பார்த்த அனைவருமே தனித்தனியாக இரண்டு வேடங்களையும் பாராட்டுகிறார்கள். ஆனால் இரண்டு வேடங்களிலும் நான் தான் நடித்தேன் என்பது யாருக்கும் தெரியவில்லை. தெரியவில்லை என்பது வருத்தமாக இருந்தாலும் இரண்டு வேடங்களுக்கும் வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

4. அரசியல் தலைவர் வேடம் அன்புமணி இராமதாசைக் குறிப்பது போல் இருக்கிறதே?

அப்படி நினைத்து எடுக்கவில்லை. பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் கண்ணோட்டத்தை வைத்து அந்த வேடத்தை எழுதினேன்

5.மருத்துவம் செய்கிறீர்களா? தொடர்ந்து படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா?

படிப்பை முடித்த பின் தொடர்ந்து மருத்துவம் செய்து வருகிறேன். தொடர்ந்து படங்களும் எடுப்பேன்.

6.நீட் தேர்வு தேவையா?

ஒரு மருத்துவராக இருக்கிறேன். நான் நீட் எழுதிப் படிக்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளில் நான் மருத்துவம் செய்த ஒரு நோயாளி கூட மரணத்தைச் சந்தித்ததில்லை என்பதை பெருமிதத்தோடு சொல்வேன். என் கருத்து நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான்.

– அ.தமிழன்பன்

Related Posts