படப்பிடிப்பில் பங்கேற்க பார்த்திபன் நிபந்தனை – படக்குழு அதிர்ச்சி
புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்குக்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஒரு கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறது.
அதற்காக தேதிகள் வாங்க நடிகர் பார்த்திபனை அணுகிய போது படக்குழுவுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இப்படத்துக்காகப் பார்த்திபனுக்குப் பெரும் தொகை சம்பளமாகப் பேசப்பட்டு,பேசியபடி கொடுக்கப்பட்டும் வருகிறதாம்.
அது இல்லாமல் ஒரு நாளைக்கு ஐந்து இலட்சம் கூடுதலாகக் கொடுத்தால்தான் தேதி தருவேன் என்று சொல்லிவிட்டாராம்.
கிட்டத்தட்ட பத்துநாட்கள் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் இவ்வாறு அவர் கேட்டதால் படக்குழு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
எதற்காக இப்படிக் கேட்கிறார்?
இந்தப்படத்துக்காக ஏற்கெனவே கொடுத்த தேதிகளில் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். அதனால் இப்போது மீண்டும்
தேதிகள் கேட்டதால் அதிகச் சம்பளம் கேட்கிறாராம்.
கொரோனா சிக்கலால் திட்டமிட்ட படப்பிடிப்புகள் எல்லாமே பல குளறுபடிகளுக்கு ஆளாகின. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்.
இதனால் ஏற்கெனவே பேசிய சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று எல்லோரும் நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பல நடிகர்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தும் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கும் பார்த்திபன், இவ்வாறு கேட்கிறாரே? என்று துக்ளக் தர்பார் படக்குழு வேதனை அடைந்துள்ளதாம்.











