விஜய் 67 படம் அறிவிக்கப்பட்டதா? – இயக்குநர் பதிவால் பரபரப்பு
விஜய் இப்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் அந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம்.
அதோடு, விஜய்யின் 67 ஆவது படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கவிருக்கிறாராம்.
அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
மாஸ்டர் படப்பிடிப்பின்போதே விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருந்தாராம்.அந்தக்கதை விஜய்க்குப் பிடித்ததால் அதையே படமாக்க ஒப்புக்கொண்டாராம்.
விஜய் 66 ஆவது படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் லோகேஷ் கனகராஜ் கமல், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கும் விக்ரம் படத்தை முடித்துவிட்டு வருவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே விஜய் நடித்த ஜில்லா படத்தை இயக்கிய இயக்குநர் நேசனின் விக்கிபீடியா பக்கத்தில் தளபதி 67 ஆவது படத்தை இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.அதுவும் படம் அறிவிக்கப்பட்டுள்ளது என்கிற குறிப்போடு வெளியிடப்பட்டிருக்கிறது.
இப்போதெல்லாம் அவரவர் விக்கிபீடியா பக்கத்தை அவரவரே திருத்திக்கொள்ளலாம் என்கிற நிலையில், இயக்குநர் நேசன் இப்படி தன் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











