சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனால் நடந்த பிரபாஸ் பட வியாபாரம் – விவரம்

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 ஏடி.பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை,தெலுங்குத் திரையுலகின் முக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது

ஒரு பன்மொழிப் படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது

இந்தப் படம், ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன.தயாரிப்பு நிறுவனம் சொன்ன தொகையைக் கேட்டு அந்நிறுவனங்கள் பின்வாங்கிவிட்டன என்கிறார்கள்.

தொடக்கத்தில் சுமார் முப்பத்தைந்து கோடி என்று விலை சொல்லியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.அதைக்கேட்டு அனைவரும் பின்வாங்கிவிட்டார்களாம்.

அதன்பின், ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கேட்டிருக்கிறார்கள்.ஆனால் ரெட்ஜெயண்ட் நிறுவனம் சுமார் பத்துகோடி மட்டுமே முன் தொகை கொடுப்போம் என்று சொன்னதாம்.

அதனால் தயாரிப்பு நிறுவனம், அதிக விலை கொடுக்க முன்வரும் நிறுவனங்களைத் தேடிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத், இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அவர் இதற்காகக் கொடுத்திருக்கும் தொகை சுமார் இருபத்தியோரு கோடி என்கிறார்கள்.

அவ்வளவு தொகை கொடுத்து அவர் படத்தை வாங்கினாலும்,தமிழ்நாடு விநியோகப் பகுதிகளிலிருந்து விநியோகஸ்தர்கள் இப்படத்தை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லையாம்.

பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டு நட்டமடைய முடியாது என்பதுதான் எல்லோருடைய கருத்தும்.

இதனால் திருப்பதி பிரசாத், இப்படத்தை நம்பி வாங்கி வெளியிடுங்கள்,கண்டிப்பாக இந்தப்படம் ஓடும், அப்படியே ஏதாவது தவறு நடந்தாலும் அதன் சுமையை உங்கள் மேல் ஏற்றமாட்டேன்.அதோடு இப்போது நான் தயாரித்துக் கொண்டிருக்கும்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் விநியோக உரிமையை உங்களுக்கே கொடுக்கிறேன் என்று உறுதியளித்திருக்கிறாராம்.

இந்த உறுதிமொழி காரணமாகவே இந்தப் படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் பொறுப்பை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆக,பான் இந்தியா படம், பாகுபலி ஹீரோ படம்,அமிதாப்பச்சன்,கமல்ஹாசன் போன்றோர் நடித்திருக்கும் படம் ஆகிய பெருமைகள் எல்லாம் இந்தப்படத்தை வெளியிட உதவவில்லை.இப்போது தயாரிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் படம்தான் உதவியிருக்கிறது.

Related Posts