சினிமா செய்திகள்

விக்ரம் படத்தைத் தள்ளி வைத்த கமல்

கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் தாண்டி 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

அதன்பின் கொரோனா சிக்கல் வந்துவிட்டது.

கொரோனா சிக்கலுக்குப் பின், படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் தொடங்கலாம் என்று அரசு அனுமதியளித்ததும் இந்தியன் 2 படத்தின் பணிகளும் தொடங்கின.

அதன்பின் செப்டெம்பர் 1 முதல் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அனுமதி அளித்த பின்பும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

இந்நிலையில்,பிக்பாஸ் வேலைகளுக்கு நடுவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படத்தின் புகைப்படப் படப்பிடிப்பு நடந்தது.

இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்குமா? என்கிற கேள்வி எழுந்தது.

இப்போது பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

டிசம்பரில் தொடங்கவிருக்கும் படப்பிடிப்புக்காக கமல் 28 நாட்கள் ஒதுக்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதற்குப்பின் தேவைப்பட்டால் சில நாட்கள் ஒதுக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.இந்தியன் 2 படப்பிடிப்பு சம்பந்தமாகப் ப்லவேறு கருத்து வேறுபாடுகள் நிலவியதால் விக்ரம் படத்துக்குத் தேதிகள் கொடுத்திருந்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அது மாறியிருப்பதால் இந்தியன் 2 படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts