சினிமா செய்திகள்

ரஜினியே ஒப்புக்கொண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு இரத்தானது ஏன்? – புதிய தகவல்கள்

ரஜினியின் 168 ஆவது படமாகத் தயாராகிக் கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.சிவா இயக்குகிறார்.

இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

வேகமாகப் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.இதனால் 2020
தீபாவளி வெளியீடு என்பதும் தள்ளிப்போனது.

அதன்பின் மே 12 அன்று, இப்படம் 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், செப்டெம்பர் 1 ஆம் தேதி முதல் திரைப்படப்படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதைத் தொடர்ந்து பல படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவது தொடர்பாக ரஜினியிடம் கேட்டபோது அவரும் சம்மதித்தாராம்.இதனால் உற்சாகமான படக்குழு படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வந்தது.

ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டார்கள்.

அக்டோபர் 8 ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது திடீரென அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம், அண்ணாத்த படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தச் சொல்லிவிட்டதாம்.

ரஜினியே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்ட போதும் அண்ணாத்த படப்பிடிப்பை இப்போது தொடங்கவேண்டாம் என்று சன் பிக்சர்ஸ் முடிவெடுத்தற்கு என்ன காரணம்?

படப்பிடிப்பில் 100 பேர் கலந்துகொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்தப்படத்தில் இனிமேல் எடுக்க வேண்டிய காட்சிகளில் எல்லாம் இருநூறிலிருந்து முன்னூறு துணைநடிகர்கள் கலந்து கொள்வது போன்ற காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கிறதாம்.

படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருப்பதால் அவர்களுடைய உதவியாளர்களைக் கணக்கெடுத்தாலே பெரிய எண்ணிக்கை வருகிறதாம்.

இவற்றோடு ராமோஜிராவ் படப்பிடிப்பு அரங்கில் படப்பிடிப்பு நடத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குள் இப்படப்பிடிப்பு அடங்காது என்கிற நிலை.

இவற்றை மீறி படப்பிடிப்பு நடத்தினாலும் சன் டிவி மற்றும் ரஜினி படப்பிடிப்பில் விதிமீறல் என்கிற செய்திக்கு இடம் கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்பதால் படப்பிடிப்பைத் தள்ளிப் போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts