நடிகர் ஷாம் திடீர் கைது
அண்மையில் விமல், சூரி ஆகிய நடிகர்கள் ஊரடங்குக் காலத்தில் அனுமதியின்றி ஊர் சுற்றியதாக அபராதம் கட்டினர். அதைத் தொடர்ந்து இப்போது,நடிகர் ஷாம் கைதாகியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்றிரவு காவல்துறையினர் அடுக்குமாடிக் குடிருப்பில் உள்ள வீட்டில் திடீரென நுழைந்து சோதனை செய்த போது, நடிகர் ஷாம் உட்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது.
இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன.
தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தொழில் அதிபர்கள் பலர் இது போன்று சட்டவிரோதமாக சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது.











