சினிமா செய்திகள்

34ஆவது படத்தில் ஆர்யாவின் சம்பளம் – ஆச்சரிய தகவல்

ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதியபடத்தை, இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.

நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

இந்தப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதன்பின் அந்நிறுவனத்துடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்தது.

அக்டோபர் 9 ஆம் தேதியன்று இப்படத்துக்கு பூசை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இணைந்தது குறித்து ஜீ ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில்…,

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப்படத்தில் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து மாறுபட்ட பாத்திரங்களில் வித்தியாசமான படங்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர் முத்தையா அனைத்துத் தரப்பு இரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர். இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி. சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட, பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.நாங்கள் அனைவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும் நல்ல படைப்பை வழங்குவோம் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தார்.

ஆனால், ட்ரம்ஸ்டிக் நிறுவனத்துடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்ததற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

அது என்னவென்றால், இந்தப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் இணைய வெளியீட்டு உரிமையை ஜீ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான்.

அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாகச் சொல்லியுள்ள தொகை 32 கோடி என்கிறார்கள்.

இதில், ஆர்யாவுக்கு 15 கோடி, இயக்குநர் முத்தையாவுக்கு 5 கோடி மீதமுள்ள 12 கோடியில் நாயகி உட்பட எல்லோருக்கும் சம்பளம் போக படப்பிடிப்பையும் முடித்துவிடுவதாக முத்தையா உறுதியளித்திருக்கிறாராம்.

அதன்படியே நடந்துவிட்டால் படம் வெளியாகி எவ்வளவு வசூல் செய்தாலும் அவை அத்தனையுமே இலாபம்தான் என்கிறார்கள்.

இதனால் இப்படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல இலாபம் என்கிறார்கள்.

நல்ல விசயம்தான்.

Related Posts