சினிமா செய்திகள்

சவாலான புதுமுயற்சி பிரின்ஸ் படம் இதில் ஈடுபடக் காரணமென்ன? – சிவகார்த்திகேயன் விளக்கம்

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ‘பிரின்ஸ்’ திரைப்படம்.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அக்டோபர் 17 அன்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன்பாபு, அருண்விஸ்வா, தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்றிருக்கும் மதுரை அன்பு,படத்தின் நாயகி மரியா,இயக்குநர் அனுதீப், நடிகர்கள் சுப்பு பஞ்சு, ப்ராங்க் ராகுல், பாரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசியதாவது……

பிரின்ஸ் படத்தின் கதை மிகவும் சிம்பிளான கதை. இந்தியப் பையன், பிரிட்டிஷ் பெண்ணைக் காதலிக்கிறான் என்பதுதான் கதை. ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட் தான் படத்தில் புதிய விசயம். காமெடி என்றால் கவுன்ட்டர் போடாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது ஆகியனவற்றைப் புதிதாகச் சொல்லியிருக்கிறோம்.

படத்தில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஊர் தமிழ்நாட்டில் இல்லை. அது கற்பனையில் தோன்றிய ஊர். அந்த ஊர், மக்கள் குறித்தும் அங்கு நிலவும் காதல் குறித்தும் ஜாலியாக கொண்டு சேர்க்கும் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.

கதைக்குள் சின்னச் சின்ன சர்ப்ரைஸ் இருக்கும். தீபாவளிக்கு பார்வையாளர்கள் திரையரங்குக்கு வந்த ஜாலியாக படம் பார்க்கும்படி தான் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இது அனுதீப்பின் அடையாளமாக இருக்கும். அவருடைய ஸ்டைல் இது. இந்தப் படத்தை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக்கொண்டு இரசிக்கப்போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

இப்ப்ட உருவாக்கம் சவாலானது. அனுதீப் தெலுங்கில் தான் சிந்திப்பார். அந்தக் காமெடியை தமிழுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வரவேண்டும். இரண்டு தரப்பு மக்களுக்கும் பிடிக்க வேண்டும். இதை ஏன் நாம் பரிசோதித்து பார்க்க கூடாது என நினைத்துத்தான் இப்படத்தை எடுத்தோம். தமிழிலிருந்து ஒரு ஹீரோ, தெலுங்கிலிருந்து ஒரு இயக்குநர் இது க்ளிக் ஆகிவிட்டால் தென்னிந்திய திரைத்துறையில் பல மாற்றங்கள் இருக்கும். காரணம் நிறைய நாயகர்கள் ஆப்ஷன்ஸ் இருக்கும்,இயக்குநர் கிடைப்பார்கள்,புதிய கூட்டணிகள் அமையும், தயாரிப்பாளர்கள் தயாரிக்க ஆர்வத்துடன் முன்வருவார்கள். அதனால்தான் இதைச் சவாலாக எடுத்துக்கொண்டு செய்திருக்கிறோம். பார்வையாளர்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறோம்.

கடந்த இருபதாண்டுகளாக தீபாவளி நாளில் திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல கதாநாயகர்களின் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக தீபாவளியன்று என் படத்தையே பார்க்கும் சந்தோசம் எனக்கு அமைந்திருக்கிறது.அதனால், இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts