December 18, 2025
சினிமா செய்திகள்

மிஷ்கின் இசையமைக்கும் இரண்டாவது படம் – விவரங்கள்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படம் 2020 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் அவர் இயக்கிய படம் பிசாசு 2. அந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதென்றும் தயாரிப்புநிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கலால் அப்படம் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மிஷ்கின் முழுநேர நடிகர் போல தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதோடு அவர் இசையமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். அவருடைய தம்பி ஆதித்யா இயக்கும் டெவில் படத்திற்கு அவர்தான் இசையமைத்திருக்கிறார். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது.

இதற்கடுத்து மிஷ்கின் மீண்டும் இயக்குநர் பொறுப்பேற்கும் புதியபடம் தொடங்கவிருக்கிறது.

அவர் இயக்கும் படத்தில் நாயகனாக விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார். ஏற்கெனவே மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்தில் சிறப்புத்தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தார்.

கலைப்புலிதாணு தயாரிக்கவிருக்கும் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கிவிட்டன.

இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் இருப்பார் என்பதுபோல் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும்படி இந்தப்படத்துக்கும் மிஷ்கினே இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறாராம்.

படத்தின் திரைக்கதை எழுதும் பணிகளுக்கிடையே பாடல்கள் உருவாக்கும் வேலையையும் செய்துவருகிறாராம்.

கலைப்புலி தாணு, விஜய்சேதுபதி ஆகியோர் இருக்கும் படத்துக்கு ஒரு சந்தை மதிப்புள்ள இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமல் மிஷ்கினே இசையமைப்பது எப்படி?

இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலிதாணு என்றாலும் முதல்பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை மிஷ்கினே ஏற்றிருக்கிறாராம்.

அதனால் முக்கியமுடிவுகளை எடுக்கும் சுதந்திரம் அவருக்கே இருப்பதால் தாமே இசையமைப்பது என்கிற முடிவை எடுத்திருக்கிறார். படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கும் விஜய்சேதுபதியும் இதற்கு ஒப்புக்கொண்டார் என்பதால் கலைப்புலி தாணுவும் சம்மதிக்க வேண்டியதாகிவிட்டதென்கிறார்கள்.

பாடல்கள் நன்றாக அமைந்து வெற்றியும் பெற்றுவிட்டால் மிஷ்கினும் சந்தைமதிப்புமிக்கவராக மாறிவிட்டுப் போகிறார். அவ்வளவுதானே?

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவிருக்கிறதாம்.இதற்காக சென்னை வானகரத்தில் ஒரு பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம். அங்குதான் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts