யாத்திசை – திரைப்பட விமர்சனம்
யாத்திசை – தென் திசை எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சொல். கதைக்களமோ மிகப் பழையது. ஆனால் தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகிற்கும் புதிது.
ஏழாம் நூற்றாண்டில், நாகரீகமடைந்து வைதீகத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு பேரரசாக இருக்கும் பாண்டிய அரசினை, பழங்குடிகளாக இருக்கும் எயினர்கள் எதிர்த்துக் கலகம் புரிந்து ஒரு கோட்டையைக் கைப்பற்றுகிறார்கள்.
பெரும் படையோடு வந்த பாண்டியன் எயினர்களை முற்றுகையிட்டு அழிக்க முனைகிறான். ஆனால் மக்களைக் காக்க எயினர் தலைவர் தனி யுத்தத்துக்கு அழைப்பு விடுத்துப் போரிடுகிறார். இறுதியில் என்னவாகிறது? என்பதுதான் படம்.
சங்க இலக்கிய பாலைத் திணையில் வரும் எயினர்கள்தான் இக்கதைக் களத்தின் நாயகர்கள்.
வரலாற்றுத் திரைப்படங்கள் தொடர்பாக தமிழ்த்திரையுலகம் உருவாக்கி வைத்திருக்கிற போலி பிம்பங்களை உடைத்திருக்கிறது இந்த யாத்திசை. ஒடுக்குமுறையின் நீட்சி அதிகாரம் என்ற ஒற்றை வரிதான் படம். இங்கே மன்னர்களைவிட அதிகாரம்தான் முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறது இப்படம்.
பாண்டியர்களுக்கும் எயினர்களுக்கும் இடையிலான அதிகாரப் போரைப் பேசுகிறது யாத்திசை. சோழர்களின் ஆதரவுடன் பாண்டியர்களை எதிர்க்கும் பழங்குடிகள் நடத்தும் போர்க்காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளன. போர்க்கருவிகள், பழங்குடியினர் உடைகள் எல்லாம் பழமையாகவே காட்டப்படுகின்றன.
ஒரு சிறிய பழங்குடி பேரரசினை எதிர்த்துப் போரிடுகிறது என்பது சமகால அரசியலுக்கும் பொருத்தமாக இருக்கிறது. எயினர்களின் சங்க காலத் தமிழ் பேச்சு வழக்கினைப் பேசுகிறார்கள். நாகரீமடைந்த பேரரசு மக்கள் எளிய தமிழோடு சமக்கிருதம் கலந்து பேசுகிறார்கள். மொழி நடையில் புதிய தோற்றத்தையே அமைத்திருக்கிறது இந்தப் படம்.
படத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என அனைவரும் புதிய முகங்கள். இதுதான் முதல் படம். கதைக்காகவும், கதைக் களனுக்காகவும் நான்கு ஆண்டுகள் உழைத்து யாத்திசையை தந்திருக்கிறார்கள்.
ஓவியர் வீர சந்தானம் நடித்த ஞானச்செருக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தரணி ராசேந்திரன், தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக பாண்டியர்களைப் பற்றிப் பேசுகிறார். எந்த ஆடம்பரமும் இல்லாத பழங்கால வாழ்க்கையை, மொழியை கண்முன் நிறுத்துகிறார்.
பொன்னால் வேய்ந்த கூரைகள் இல்லாத அரசர்களைப் பார்க்கமுடிகிறது. தினவெடுத்த தோள்களுடன் படை வீரர்கள். கோவணம் கட்டிய பழங்குடி மனிதர்கள். பழந்தமிழர் வாழ்க்கை, பழந்தமிழ் மன்னர்கள் பற்றிய ஆய்வுகளின் மூலம் கிடைத்த தரவுகளை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆரியர்களின் வருகைக்குப் பிறகு அவர்களின் சூழ்ச்சியால் கொண்டுவரப்பட்ட நரபலி கொடுமையும் படத்தில் இருக்கிறது.
இப்படத்தில் சக்தி மித்ரன், சேயோன் ராஜலட்சுமி, சமர் மற்றும் வைதேகி அமர்நாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் குரு சோமசுந்தரம்,விசாரணை புகழ் எழுத்தாளர் சந்திரகுமார், செம்மலர் அன்னம், சுபத்ரா மற்றும் விஜய் சேயோன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.அனைவருமே மிக மிக ஈடுபாட்டுடன் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
புதுமுக நடிகர்களான சக்தி மித்ரன், சேயோன் இருவரும் பாண்டிய மற்றும் எயின தலைவர்களாக உடல்மொழியிலும் அசத்துகின்றனர்.
யாத்திசையின் ஒளிப்பதிவு அப்போகலிப்டோ படத்தைப் பிரதிபலிக்கிறது. பிரம்மாண்டமான காட்சிகளில் ஒளிப்பதிவாளர் அகிலேஷின் தனித்துவம் தெரிகிறது.
போர்க்காட்சிகளில் இசை காதை அடைக்காமல் இயல்பாக இருக்கிறது. விசாரணை படத்தின் கதையை எழுதிய எழுத்தாளர் சந்திரகுமார், எயினர்களின் முக்கிய பிரதிநிதியாக நடித்திருக்கிறார். அவரது தோற்றமும், பேச்சும் படத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது. ஒரு சிறுவனுக்குக் கதை சொல்லத் தொடங்கும் சந்திரகுமார்,இறுதிக்காட்சியில் இந்தக் கதை முடியாது. இப்போதுதான் தொடங்குகிறது என்கிறார்.
படத்தின் முதல் காட்சியிலேயே பிரம்மாண்டமாக காட்டப்படும் காட்டருவி, பெருங்காட்டில் வாழும் பழங்குடிகள், மிகையின்றி காட்டப்படும் பாண்டிய அரசர், போருக்கான சடங்குகள், தேவரடியார் என புதிய பாதையில் நடந்திருக்கிறது யாத்திசை. ஒளிப்பதிவிலும் காட்சி அமைப்புகளிலும், சினிமா ஒரு காட்சிக் கலை என்ற நோக்குடன் பயணித்துள்ளார்கள்.
வசனம் பழங்காலத் தமிழில் வருகின்ற நேரத்தில் சங்கத்தமிழுக்கு சமகாலத் தமிழ் வசனங்கள் எழுத்தில் காட்டப்படுகின்றன.அவை காட்சிகளை இரசிப்பதைத் தடுக்கின்றன. ஆனால், படம் வளரும்போது நாம் மொழியை மறந்து திரைக்கதைக்குள் சென்றுவிடுகிறோம்.
யாத்திசை தமிழ் மக்களால் கொண்டாடப்பட வேண்டிய படம்.
– மகிழ்மதி