சென்னையில் உலகப்படவிழா – உலகசினிமா பாஸ்கரன் நடத்துகிறார்

உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2, மற்றும் 3 ஆம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள்) சென்னையில் உள்ளதேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது.
இதில் விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் செந்தில் குமரன் சண்முகம் பேசும்போது….
படம் இயக்க வரும் இளம் இயக்குநர்கள் தங்களது படங்களைத் திரையரங்குகளில் வெளியிட ஒரு வடிவத்திலும், திரைப்பட விழாக்களில் வெளியிட ஒரு வடிவத்திலும் எடுக்க இது போன்ற திரைப்பட விழாக்கள் துணையாக இருக்கும் என்றார்.
இயக்குநர் ராசி அழகப்பன் பேசியபோது….
வெளிநாடுகளில் சினிமாவுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. படைப்பாளிகளையும் எழுத்தாளர்களையும் திரைப்பட விழாக்கள் தான் கொண்டாடுகின்றன. இந்த 15 படங்களும் தகுதி உள்ள படங்கள். இந்த விழாவிற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.
நிகழ்வில் விழா ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் பேசியது…..
பதினைந்து திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளன. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவைப் போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய அடவி என்ற மௌன திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படுகிறது.
மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் பெஸ்டிவல் வெர்ஷன் திரைப்படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் என பல பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. அதுமட்டுமின்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவோடு இணைந்து சென்னை உலக சினிமா விழாவில் அவரது திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.
மேலும் வெள்ளிமலை, இராவணக் கோட்டம் போன்ற படங்களும் ஃபெஸ்டிவல் வெர்ஷன் என்ற பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டு திரையிடத் தயாராக இருக்கிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்கள் போட்டிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து 15 படங்களைத் தேர்வு செய்து திரையிடுகிறோம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் பிரதானமாக திரையிடப்பட உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கு நுழைவுக் கட்டணம் இல்லை. திரைப்பட விழாவில் படங்களைக் காண வரும் பார்வையாளர்களுக்கும் கட்டணம் கிடையாது. இந்த விழாவிற்கான அனைத்துச் செலவுகளும் நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நடக்கிறது.
மேலும், இந்த விழாவில் குறைந்த செலவில் உலக சினிமாவை உருவாக்குவது எப்படி? என்கிற பயிற்சிப் பட்டறையை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருமான விக்னேஷ் குமுளை, நேரடி ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத் ஆகிய இருவரும் இணைந்து நடத்த இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் முறையே பன்னாட்டு திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை பெற்று வரும் கூழாங்கல் மற்றும் கற்பரா ஆகிய திரைப்படங்களை உருவாக்கியவர்கள்.
திரைப்பட இரசனை குறித்த பயிற்சிப் பட்டறையை பல திரைப்பட இயக்குநர்கள் இணைந்து நடத்தவிருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கான சினிமா திரையிடும்போது மட்டும் சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற திரைப்படங்களைக் காண சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சிறுவர் திரைப்படங்களைக் காண வரும் சிறுவர்களுக்கும் அவர்களுடன் துணையாக வரும் பெற்றோர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள்.
பார்வையாளர்களுக்கான அனுமதிச் சீட்டினைப் பெற கூகுள் ஃபார்ம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.