எல் ஐ கே படம் வெளியீடு எப்போது?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்ஐகே.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படம் வெளியீடு குறித்து கடந்த ஆண்டு, மே 12 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தத் திரைப்படம் 2025 செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.சொன்னபடி அப்போது அந்தப்படம் வெளியாகவில்லை.
அதன்பின் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அப்போதும் படம் வெளியாகவில்லை.
அடுத்து, டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், அந்தத் தேதியிலும் படம் வெளியாகவில்லை.
அதை கடைசிநேரத்தில்தான் சொன்னார்கள். அப்போதே இப்படம் பிப்ரவரி மாதம் காதலர் நாளையொட்டி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டது.
அதேபோல்,கடந்த சில நாட்களாக இப்படம் பிப்ரவரி 12 அன்று வெளியாகும் என்கிற தகவல் கசியவிடப்பட்டது.அதை பலரும் பரப்பத் தொடங்கினார்கள்.
அதை நம்பி, அந்தத் தேதியில் வெளியாகவிருந்த சில படங்கள் வேறு வெளியீட்டுத் தேதிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால்,இப்போது மீண்டும் அந்தத் தேதியில் படம் வராது என்று சொல்கிறார்கள்.
ஏன்?
ஏற்கெனவே படம் வியாபாரம் மற்றும் வெளியீடு தொடர்பாக, தயாரிப்பாளர் லலித்குமாருக்கும் இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு அப்படியே தொடர்கிறதாம்.
அதனால்,படத்தை வெளியிடுவதற்குத் தேவையான பணம் சம்பந்தப்பட்ட சிக்கல் அப்படியே தொடருகிறது.எனவே, அந்தத் தேதியில் படம் வராது என்று சொல்லப்படுகிறது.
இந்தச் சிக்கலில் நல்லமுடிவு எட்டப்பட்டிருந்தால்,படக்குழு சார்பிலேயே வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு அதை விளம்பரப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியிருப்பார்கள்.நல்ல முடிவு எடுக்கப்படவில்லை என்பதாலேயே அதிகாரப்பூர்வு அறிவிப்பு எதுவும் வரவில்லை என்கிறார்கள்.
இன்னொரு பக்கம், இந்தப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், தன் மகனை நாயகனாக்கி எடுத்த சிறை படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.அந்தத் தெம்போடு அடுத்தபடத்தையும் அறிவித்து அதன் வேலைகளும் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
எனவே, இனிமேல் அவர்,தன் மகனை வைத்துவிட்டு மட்டுமே படங்கள் தயாரிப்பார்.
எல் ஐ கே உட்பட எந்தப்படத்துக்காகவும் பொறுப்பெடுக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது.அதனால் எல் ஐ கே படத்தை வெளியிடும் மொத்தப் பொறுப்பும் விக்னேஷ்சிவனின் தலையில்தான் இருக்கிறது என்கிறார்கள்.













