சினிமா செய்திகள்

விஜய் 65 படத்தின் புதிய இயக்குநர் இவர்தான்

விஜய்யின் 64 ஆவது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் அப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.இதைத் தொடர்ந்து விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

அப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது.ஆனால் சம்பளச் சிக்கல் காரணமாக அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.

அதன்பின் விஜய்யின் 65 ஆவது படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் மகிழ்திருமேனியோ உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இன்னும் சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் விஜய் 65 படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்விக்குப் பல பதில்கள் வருகின்றன. எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் ஒரு இயக்குநரை விஜய் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அந்த இயக்குநர் நெல்சன்.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடநது கொண்டிருக்கிறது.

இந்நிலையில், டாக்டர் படப்பிடிப்புக்கு நடுவே நெல்சன், விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். அக்கதை விஜய்க்குப் பிடித்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் படம் முடிந்ததும் நெல்சன் படத்தைத் தொடங்கலாம் என்று விஜய் சொல்லியிருந்தாராம்.

அதற்குள் விஜய் 65 இல் ஏ.ஆர்.முருகதாஸ் இல்லை என்றாகிவிட்டது. இதனால் விஜய் 65 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரலாம் என்று சொல்கிறார்கள்.

Related Posts