வெங்கட்பிரபு சிவகார்த்திகேயன் மோதல் – படம் கைவிடப்பட்டது
சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.இதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
அப்படத்துக்கு அடுத்து ஃபேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவருகின்றன.
அதற்கடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது. அப்படத்தின் படப்பிடிப்பு தீபாவளிக்குப் பிறகு நவம்பர் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொன்னார்கள்.
இப்போது அதில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.
அதன்படி, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது.
அதற்குக் காரணம், வெங்கட்பிரபு எப்போதும் முழுமையான திரைக்கதையைச் சொல்லமாட்டார்.மையக்கதை மற்றும் அதை எப்படி எப்படியெல்லாம் கொண்டு போகப்போகிறோம் என்கிற எண்ணங்களை மட்டுமே சொல்வார்.
அப்படி அவர் சொன்ன மையக்கதை கேட்டு அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சிவகார்த்திகேயன்.ஆனால் அதை முழுமையான திரைக்கதை ஆக்கும்போது நடக்கும் மாற்றங்கள் சிவகார்த்திகேயனுக்கு உவப்பாக இல்லையாம்.
அதனால், கதையை மாற்றுங்கள் என்று வெங்கட்பிரபுவிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு கடுப்பாகிவிட்டாராம் வெங்கட்பிரபு.
ஒவ்வொரு கதையையும் எவ்வளவு கஷ்டப்பட்டு தேடிப்பிடிக்கிரோம் ரொம்ப ஈசியா கதையை மாற்றச் சொல்வதா? என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம்.
இதனால், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகச் சொல்லப்பட்ட படம் நடக்காது என்கிறார்கள்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பாரா? என்றால், அதிலும் சிக்கல் இருக்கிறதாம்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளத்தைக் கேட்டு தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துவிட்டதாம்.அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்துப் படமெடுத்தால் இலாபமீட்ட முடியாது என்பது மட்டுமல்ல பெரிய அளவில் நட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற நிலை. இது தொடர்பான பேச்சுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் கதை சம்பந்தமாகச் சிக்கலும் வந்துவிட்டதால் படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
அதனால், அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிப்பது என்கிற முடிவுக்கு சிவகார்த்திகேயன் வந்துவிட்டார் என்றும் அப்படத்தின் பட்ப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.











