October 29, 2025
Uncategorized சினிமா செய்திகள்

உதயநிதிக்குப் பெருமை சேர்க்கும் புதிய படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்து கொண்ட நாடு.

இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன.

குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களை இந்தியில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்றவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர். சமீபமாக அவர் இந்தியில் வெற்றி பெற்ற படங்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்து அதில் இங்கு இருக்கும் நடிகர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைப் பணி புரிய வைத்து ஊக்குவித்து வருகிறார்.

கடந்த வருடம் அமிதாப் பச்சன் நடித்த “பிங்க்” திரைப்படத்தை தமிழில் அஜித் குமார் நடிப்பில் “நேர்கொண்ட பார்வை” என்று எடுத்து பெரும் வெற்றியைப் பெற்று அதன் மூலம் தமிழ்த் திரை உலகில் தன் வருகையைப் பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை”என்கிற தலைப்பில் நேரடித் தமிழ்ப் படம் ஒன்றும் தயாரித்து வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இதைத் தொடர்ந்து போனி கபூர் இந்தியில் பெரும் வெற்றி பெற்ற “ஆர்டிக்கல் 15” படத்தையும் தமிழில் வழங்க உள்ளார்.

பல்வேறு படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தன் நெருக்கத்தை வெளிப்படுத்தி உள்ள உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க,”கனா’படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அருண்ராஜா காமராஜா இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து போனி கபூர் வழங்கும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல். ரோமியோ பிக்சர்ஸ் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிக்க உள்ள இந்தப் படத்தின் மற்ற நடிகை, நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இப்படம் பற்றி தயாரிப்பாளர் ராகுல் கூறியதாவது, “போனி சார் ” ஆர்டிக்கல் 15″ படம் வெளி வந்த உடனே அதற்கான தமிழ் உரிமையை வாங்கி விட்டார். பல்வேறு வருடங்களாக தயாரிப்பு, விநியோகம் என்று பல்வேறு துறைகளில் பல வெற்றிப் படங்கள் மூலம் தடம் பதித்த எனக்கு இப்பொழுது தயாரிப்பாளராக ஆகும் அந்தஸ்தை அவர் உருவாக்கித் தந்து உள்ளார். இதற்காக அவருக்கு வாழ் நாள் முழுதும் கடமைப் பட்டு இருக்கிறேன். நான் திரைத்துறைக்கு வந்து பணியாற்றிய முதல் நிறுவனம் உதயநிதி சாரின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தான். இன்று அவரை வைத்துப் படம் தயாரிப்பது வரை என்னை வளர்த்து ஆளாக்கி விட்ட உதயநிதி சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தக் கதை தான் என்று முடுவெடுத்த பின்னர் இயக்குனராக எங்கள் முதல் தேர்வு இயக்குனர் அருண்ராஜா காமராஜா தான். சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் இந்தப் படத்தை இயக்க உணர்ச்சி பிளம்பாகக் காட்சி அமைக்கும் அருண் ராஜாவை விட வேறு யார் சிறப்பாக செய்து விட முடியும். அவரை இயக்குநராக ஒப்பந்தம் செய்து உடனே நாயகன் குறித்த விவாதத்தில் எங்கள் அனைவருடைய ஒருமித்த கருத்து உதய் சார்தான் இதற்கு பொருத்தமானவர் என்பது தான். இதற்காக அவரை அணுகியவுடன் தன்னுடைய இடை விடாத அரசியல் மற்றும் சமுதாய களப் பணிகளின் இடையே இந்தப் படத்தை செய்ய ஒப்புக் கொண்டார்.இந்தப் படத்தின் நாயகனின் பாத்திர அம்சம் உதயநிதி சாருக்கு கச்சிதமாகப் பொருந்தும் என்பது அனைவரின் நம்பிக்கை. அனைவரின் கவனத்தை ஈர்க்க உள்ள இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் பிரம்மாண்டமாக இருக்கும், விரைவில் படப்பிடிப்பு குறித்த தகவல்களும் வெளியாகும்

இவ்வாறு அவர் கூறினார்.

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிக்கல் 15’. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி இந்தப் படம் வெளியானது.இதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஆர்டிக்கல் 15 படம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரவர்க்கத்தால் நேரும் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். ஆளும்வர்க்கத்தின் அதிகார அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் உதயநிதியின் புகழ் பன்மடங்கு உயரும் என்கிறார்கள்.

Related Posts