September 10, 2025
சினிமா செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி தயாரிப்பாளர் கோரிக்கை திடுக்கிட்ட சிவகார்த்திகேயன் – விவரம்

அண்மையில் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றி பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார்,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை அபிசன் ஜீவிந்த் எனும் புது இயக்குநர் இயக்கியிருந்தார். இந்தப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இவர்கள்,இதற்கு முன்பாக தயாரித்த குட்நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களும் வெற்றி பெற்ற படங்கள்.இப்போது அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் ஆகியனவற்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில்,சிவகார்த்திகேயனைச் சந்தித்து இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஒரு கோரிக்கை வைத்தனராம்.அவர் திடுக்கிட்டுப் போனாராம்.அதுகுறித்து திரையுலகில் உலவும் தகவல் இங்கே…

வரிசையாக மூன்று படங்கள் வெற்றி பெற்றதும் இந்நிறுவனத்தினருக்குத் தலைகால் புரியவில்லை.அதனால்,நாங்கள் கதை கேட்டு அதைத் தேர்ந்தெடுத்தால் அது நல்ல கதை.நாங்கள் நிராகரித்தால் அந்தக் கதை சரியில்லை என்று அர்த்தம்.அதை யார் எடுத்தாலும் ஓடாது என்று வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

அதோடு,இந்நிறுவனத்தில் முதல்படம் இயக்கிய விநாயக் சந்திரசேகரனும்,இந்நிறுவனம் சார்பாகக் கதைகள் கேட்பதாகச் சொல்லப்படுகிறது.அவரும் பல கதைகளை நிராகரித்ததோடு மோசமான கருத்துகளையும் சொல்லிவிட்டாராம்.

இவை மட்டுமின்றி இன்னொரு விசயமும் நடந்திருக்கிறது.அது என்ன?

பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.அந்தப் படத்தை டான் பட இயக்குநர் சிபிச் சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது.ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் நீக்கப்பட்டுவிட்டார்.அவருக்குப் பதிலாக அந்தப் படத்தை இயக்க விநாயக் சந்திரசேகரன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.இதுதொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்,டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்குப் பெரிய வரவேற்பு கிடைத்து எல்லோரும் அந்தப் படத்தையும் நிறுவனத்தையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.சிவகார்த்திகேயனும் அப்படக் குழுவினரை அழைத்துப் பாராட்டினார்.

அப்போது, இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை நாங்களே தயாரிக்கிறோம்,இயக்குநருக்கு இதில் முழு சம்மதம் நீங்கள் ஒப்புக்கொண்டால் சரி என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்டார்களாம்.

இதைக் கேட்ட சிவகார்த்திகேயன் திடுக்கிட்டுப் போய்விட்டாராம்.ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தம் போட்டு வேலைகள் தொடங்கிய ஒரு படத்தை நீங்கள் எப்படிக் கேட்கமுடியும்? என்று கேட்டு அதை முற்றாக நிராகரித்துவிட்டாராம்.

திரையுலகில் பேசப்படும் இந்தத் தகவலால் டூரிஸ்ட் ஃபேமிலி தயாரிப்பு நிறுவனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

ஒரு நிறுவனம் வளர்கிறது என்றால் அதன்மேல் வன்மம் கொண்டு எதிர்மறைக் கருத்துகளைப் பலர் பரப்புவார்கள்.அப்படித்தான் இதுவும் இருக்கிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இரண்டில் எது முழுஉண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

Related Posts