நவம்பரில் வாடிவாசல் படப்பிடிப்பு – சூர்யா திடீர் முடிவு
சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஆயுதபூசைக்குப் பிறகு தொடங்கி அக்டோபர் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
அப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படம் எதுவென்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
அவர் இப்போது,கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்,சொந்தத் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் ஒரு படம்,ஸ்டுடியோகிரின் நிறுவனத்துக்காக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இவற்றில் எந்தப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்கும் என்று தெரியாமல் இருந்தது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு முதல்பார்வையும் வெளியிடப்பட்ட வாடிவாசல் படப்பிடிப்புக்கு முன்னால் பாலா படம் தொடங்கிவிடும் என்று சொல்லப்பட்டது.மூன்று மாதங்களில் மொத்தப்படப்பிடிப்பையும் பாலா முடித்துவிடுவார் அதன்பின் வாடிவாசல் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்களாம்.
ஆனால், திடீர் மாற்றமாக முதலில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க சூர்யா சம்மதம் சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
அதனால், நவம்பர் 4 தீபாவளி முடிந்ததும் வாடிவாசல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.நவம்பரில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அப்படத்துக்கு இடையிலேயே பாலா இயக்கும் படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.
2020 சனவரி மாதம் முதன்முதல் அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2021 முடியும் நேரத்தில் தொடங்கப்படவிருக்கிறது.











