சூரரைப் போற்று – திரைப்பட விமர்சனம்

கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத். கர்நாடக மாநிலம்ம ண்டியாவின் மெல்கோட்டில் பிறந்தார், கோரூரில் ( கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு தொலைதூர கிராமம்) வளர்ந்தார்.
ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்த அவர், படிப்பை முடித்தவுடன் இந்திய இராணுவத்தில் சேருகிறார்.
29 வயதில் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பி சொந்தத் தொழில் தொடங்குகிறார்.
முதலில் விவசாயம் அதன்பின் விமானத் தொழில்., 2013 இல் மூடப்பட்ட ஏர் டெக்கான்(Air Deccan) நிறுவனத்தைத் தொடங்கியவர்.
இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற கேப்டன், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி எனப் பல முகங்கள் கொண்ட அவர் 2010 இல் வெளியிட்ட சிம்ப்ளி ப்ளை என்கிற தன் வரலாற்று நாலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் சூரரைப் போற்று.
கிராமத்து மனிதன் தொடங்கி விமான நிறுவன அதிபர் வரையில் ஒருவர் உயரும்போது பல மாறுபட்ட வாழ்க்கை முறை மற்றும் மாறுபட்ட தோற்றங்களைக் கடந்தாக வேண்டும்.
அந்த மாற்றங்களை அழகாகப் பிரதிபலித்திருக்கிறார் சூர்யா. இறுக்கமான உடையுடன் குளிர்கண்ணாடி அணிந்து அவர் தோன்றும்போது அவரது இரசிகர்களைப் போலவே நமக்கும் விசிலடிக்கத் தோன்றுகிறது.
தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் மிளிர்கிறார்.
ஜாடிக்கு ஏற்ற மூடி போல அமைந்திருக்கிறார் நாயகி அபர்ணா.அவரது குறும்புப் பார்வைகள் இளைஞர்களைக் கொள்ளை கொள்ளும்.
பூ இராமு, ஊர்வசி, மோகன்பாபு, விவேக் பிசன்னா, காளி வெங்கட், கருணாஸ், பரேஷ் உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறாரகள்.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு சூர்யாவின் பிம்பத்தைப் பன்மடங்கு உயர்த்திக் காட்டுகிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் இரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் கன கச்சிதம்.
நிஜ வாழ்க்கையை சூர்யா போன்ற ஓர் ஆளுமைக்குரிய திரைக்கதையாக மாற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
காட்சிகள் மற்றும் வசனங்களில் மட்டுமின்றி உடைகளிலும் ஆதிக்க எதிர்ப்பை நுட்பமாக இழையோடவிட்டிருக்கிறார்.
சாமானிய திரைப்பட இரசிகனையும் திருப்திப்படுத்திக் கொண்டே உயர்ந்த விசயங்களைச் சொல்லிக்கொண்டு போகிறார்கள்.
சூர்யாவின் பெருமை சொல்லும் படங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.