சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் திடீர் அமெரிக்கப் பயணம் – புதுப்படம் என்னாச்சு?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் தமிழர் திருநாளையொட்டி அடுத்த ஆண்டு சனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதனால் அதன் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.அப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் குரல்பதிவு ஆகியனவற்றில் தனது பங்கை முழுமையாக முடித்துவிட்டாராம் சிவகார்த்திகேயன்.

பராசக்தி படத்துக்கு அடுத்து அவர் இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் இருக்கின்றன.

டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒருபடம்.அப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு வரும் பத்தாம் தேதி தொடங்கும் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், இப்போது சிபிச்சக்ரவர்த்தி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்காமல் தள்ளிப்போகிறது என்று சொல்லப்படுகிறது.இதற்கு, சிவகார்த்திகேயனின் சம்பளம், தயாரிப்பு நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் ஆகியன காரணங்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

அது?

சிவகார்த்திகேயன் அமெரிக்கா செல்கிறார் என்கிற தகவல்தான் அது.

அவர் மட்டுமில்லை அவருடன் வெங்கட்பிரபுவும் செல்கிறார் என்கிறார்கள்.இருவரும் அமெரிக்காவிலுள்ள நவீன தொழில்நுட்ப அரங்கம் செல்கிறார்கள் என்றும் அங்கு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனின் தோற்ற மாற்றம் தொடர்பான சோதனைகள் செய்யப்படவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

வெங்கட்பிரபுவின் முந்தைய படமான தி கோட் படத்துக்காக அப்பட நாயகன் விஜய்யுடன், அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்குச் சென்று அங்கு 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் சோதனைப்படம் எடுத்தனர்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபலமான லோலா விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோவில் அது நடந்தது.

இப்போதும் சிவகார்த்திகேயனை வைத்து அம்மாதிரி ஒரு சோதனை நடத்தவிருக்கிறார்கள் என்றும் அதற்காகத் தான் இருவரும் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வேலைகளை முடித்துவிட்டு இருவரும் டிசம்பர் 14 அன்றுதான் சென்னை திரும்புகிறார்களாம்.

இதனால்தான் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்க வேண்டிய படம் தொடங்காது என்கிற செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் திடீர் அமெரிக்கப் பயணத்தால் பேசன் ஸ்டுடியோஸ் படம் தொடங்குவது தள்ளிப் போகிறதா? அல்லது வேறு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்கிற கேள்விகளுக்கான விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Related Posts