அடுத்த பட இயக்குநரைத் தேர்ந்தெடுத்தார் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் இப்போது, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குநர் அசோக் என்பவர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் இயக்குநர் அட்லியிடம் பணியாற்றியவராம்.
அதைத் தொடர்ந்து இன்னொரு இயக்குநரிடம் கதை கேட்டு அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
துல்கர்சல்மான் நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொன்னாராம். அந்தக்கதை அவருக்குப் பிடித்திருந்ததாம்.
அதனால், முழுமையான திரைக்கதை எழுதப் பணித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.அவரும் வெளியூர் சென்று திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அந்தப்பணி முடிவடைந்த பின்பு, அப்படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.











