November 5, 2025
சினிமா செய்திகள்

4 தயாரிப்பாளர்களை சிம்பு ஏமாற்றினாரா? நடந்தது என்ன? – தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே விளக்கம்

நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடந்துள்ளது.

அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமுன்பு பெரிய சிக்கல் ஏற்பட்டது.

நடிகர் சிம்பு மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால் அச்சிக்கல் தீரும்வரை புதிய படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்று தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்தது. 

ஆகஸ்ட் 2 ஆம் தேதி இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தயாரிப்பாளர்கள் சங்கம், ஆர்.கே.செல்வமணி, உஷாராஜேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று சொல்லப்பட்டது.

அதன்பின் முதல்கட்டப் படப்பிடிப்பில் தொழிலாளர்கள் சம்மேளனம் கலந்துகொண்டது. அதனால், இனிமேல் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதோடு, முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார், சிம்பு தரப்பு நியாயங்களைப் பேசியுள்ளார்.

அதில்….

நான்கு தயாரிப்பாளர்கள் சிம்பு மீது புகார் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 

அவற்றில் முதலாவதாக,  இயக்குநர் லிங்குசாமி தம்பி சுபாஷ்சந்திரபோஸுக்குப் பணம் கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதில் நடந்தது என்னவென்றால், பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு படத்தில் நடிக்க சிம்புவுக்குக் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் அது. 

அது தொடர்பான ஒப்பந்தத்திலேயே, படம் எடுக்கவில்லையெனில் இந்த அட்வான்ஸை திருப்பித் தர வேண்டியதில்லை என்று இருக்கிறது. ஆனாலும் மனிதநேய அடிப்படையில் அந்தத் தொகையைக் கொடுக்கச் சொல்லிவிட்டார்கள். 

இரண்டாவதாக, சிவசங்கர் என்கிற தயாரிப்பாளருக்கு ஐம்பது இலட்சம் தர வேண்டும் என்பது. 

அந்தத் தயாரிப்பாளர் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். அப்போது நீதிமன்ற அறிவுறுத்தல்படி அந்தத் தொகையை நீதிமன்றத்தில் கட்டிவிட்டார்கள். அதை அவர் எடுத்துக்கொள்ளலாம் என்கிற நிலையில்தான் இருக்கிறது.

மூன்றாவதாக, தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி, சிம்புவின் அப்பா ஒரு பெரும்தொகையைத் தனக்குத் தரவேண்டும் எனச் சொல்லியிருந்தார். ஆனால், அவரிடம் நேரடியாக எந்த ஒப்பந்தமும் டி.ராஜேந்தர் செய்துகொள்ளவில்லை, பி.டி.செல்வகுமாருக்கும் அவருக்கும்தான் ஒப்பந்தம்.அதை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் காட்டிவிட்டார்கள்.அதோடு, பி.டி.செல்வகுமாரை அழைத்துப்பேசி சுமுக முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.

நான்காவது மைக்கேல் ராயப்பன் சிக்கல்.

பல ஆண்டுகளாக இருக்கும் அந்தச் சிக்கலும் நீதிமன்றத்தில் இருக்கிறது. விஷால் தலைவராக இருந்த நேரத்திலேயே இது தொடர்பாக சிம்பு தொடர்ந்த வழக்கில், நாங்கள் இதில் கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் சொல்லியிருக்கிறது. அதனால் அதுவும் நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறதோ அதை சிம்பு ஏற்பார்.

இவ்வாறு தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் விளக்கமளித்துள்ளார்.

Related Posts