சிம்பு பக்குவமானவர் – கன்னட நடிகர் புகழ்ச்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சென்னையில் நடிகர்கள் நடத்திய கண்டனப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை. தனக்கு அழைப்பில்லை என்று கூறியிருந்தார். அதோடு காவிரிச் சிக்கலில் கர்நாடகத்துக்கு ஆதரவான கருத்துகளைச் சொல்லியிருந்தார். இதுகுறித்து பிரபல கன்னட நடிகர் அனந்த்நாக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர்,
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்குக் காவிரி பிரச்சினையை பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வர இருப்பதால் இங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் இப்போதைக்குத் தேர்தல் இல்லை. எனவே கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு இருவரும் காவிரி பிரச்சனையை கிளப்பி போராடி இருக்கலாம்.
ரஜினியும், கமலும் அவர்களுடைய அரசியலுக்கு காவிரி பிரச்சினையை பகடைக் காயாக்கி குளிர்காயப் பார்க்கின்றனர். இந்த பிரச்சினையில் இளம் நடிகர் சிம்புவுக்கு இருக்கும் பக்குவமும் முதிர்ச்சியும் மூத்த நடிகர்களான ரஜினி, கமலுக்கு இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழக அரசியல்வாதிகள் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வமில்லாமல் பெரிதுபடுத்துகின்றனர்.
காவிரி, கர்நாடகத்தில் உற்பத்தியானாலும் தமிழகத்துக்கே அதிக நீர் கிடைக்கிறது. கன்னடர்கள் நல்லவர்கள், அன்பானவர்கள். இதை தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சிம்புவுக்கு கன்னட நடிகர் ஆதரவாகப் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.











