செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்ஹாசன் நடிக்கும் படம் – விவரங்கள்

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவர் அறன்.இவர் இப்போது இயக்குநராகக் களமிறங்குகிறார்.அவர் எழுதி இயக்கியிருக்கும் படத்தின் பெயர் ஜிகிரிதோஸ்த்.

இயக்கியதோடு படத்தில் நடித்துமிருக்கிறார்அறன்.அவரோடு பிக்பாஸ் புகழ் பெற்ற ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.ஜே.ஆஷிக், பவித்ர லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, லேட் ஆர்.என்.ஆர். மனோகர், சரத், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தை அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை அருள் மொழி வர்மன் ஏற்றிருக்கிறார். இப்படத்துக்கு, ஒளிப்பதிவு ஆர்.வி.சரண், சண்டைப் பயிற்சி மகேஷ் மேத்யூ, நடனம் தினா, ஆடியோகிராஃபி பணிகளை சரவண குமார், டி.ஐ. மற்றும் சி.ஜி. பணிகளை ஏ.கே.பிரசாத் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தின் பாடல்களை சுதன் பாலா எழுதியிருக்கிறார்.

எழுதி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அறன், கே.பிரதீப் உடன் சேர்ந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.இவர்களோடு எஸ்.பி.அர்ஜூன் மற்றும் ஹக்கா ஜெ ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் கதை நண்பர்களைச் சுற்றியே நகர்கிறது.எனவே ஜிகிரிதோஸ்த் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மூன்று நண்பர்கள் அவுட்டிங் செல்லும் வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுவதைப் பார்க்கின்றனர்.அந்தப் பெண்ணை கேங்ஸ்டர்களிடம் இருந்து காப்பாற்றினார்களா? என்பதே படத்தின் திரைக்கதையாம். “டெரரிஸ்ட் டிராக்கர்” எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இப்படத்தின் சிறப்பம்சம் என்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Related Posts