சினிமா செய்திகள்

சக்தித் திருமகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பில் தெம்பு – என்ன நடந்தது?

அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் சக்தித் திருமகன்.இப்படத்தில் நாயகியாக திருப்தி நடித்திருக்கிறார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி மற்றும் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் இது.

இப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது.இந்நிலையில் அந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றி அறிவித்திருக்கிறார்கள்.அதன்படி இப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்போதெல்லாம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பியிருக்கும் இணையதள ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் விற்பனை நிலவரம் மிகக் கலவரமாக இருக்கிறது.முன்பெல்லாம் எல்லாப் படங்களையும் வாங்கிக் கொண்டிருந்த அந்நிறுவனங்கள் இப்போது படங்களை வாங்குவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டன.

இதனால் பல படங்கள் வெளியாகாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தெம்பாக வெளியீட்டுத்தேதியை அறிவித்தது எப்படி?

இப்படத்தின் இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன விற்பனை ஆகிவிட்டதாம்.இணைய ஒளிபரப்பு உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனமும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சியும் பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இவ்விரண்டின் விலை சுமார் பதினோரு கோடி என்றும் சொல்லப்படுகிறது.

விஜய்யின் ஜனநாயகன் படம் இணைய ஒளிபரப்பு உரிமையைப் பெற்ற நிறுவனம் விதித்த நிபந்தனை காரணமாக மட்டுமே இவ்வாண்டு ஆயூதபூசை வெளியீட்டிலிருந்து நான்கு மாதங்கள் தள்ளி அடுத்தாண்டு பொங்கலுக்குப் போனது.ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு,பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் 2 உள்ளிட்ட படங்கள் விற்பனை இன்னும் நடக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், இப்படங்களுக்கு அந்தத் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்லும் விலையும் இணைய தள நிறுவனங்கள் தர முன்வரும் தொகையும் சம்பந்தமில்லாமல் இருப்பதுதான் என்கிறார்கள்.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் இந்தப்படம் நல்ல விலைக்கு விற்பனை ஆகியிருப்பதும் வெளியீட்டுத் தேதி அறிவித்திருப்பதும் மற்ற தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறதாம்.விஜய்ஆண்டனி போல் திட்டமிட்டுப் பணியாற்றினால் எல்லாம் சாத்தியமாகும் என்றும் சொல்கின்றனர்.

Related Posts