சினிமா செய்திகள்

ஆர் ஆர் ஆர் பட இணைய ஒளிபரப்பில் பரபரப்பு – அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த படம் ‘ஆர்ஆர்ஆர்.மார்ச் 25 ஆம் தேதி இப்படம் வெளியானது.ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது இப்படம்.

இப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமையை ஜீ நிறுவனம் பெற்றிருந்தது.மே 20 ஆம் தேதி முதல் ஜீ நிறுவனத்தில் எல்லா மொழிகளிலும் இப்படம் காணக்கிடைக்கிறது.

இந்நிலையில், ஹாட்ஸ்டார் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றுமுதல் ஆர் ஆர் ஆர் படத்தை ஹாட்ஸ்டாரில் காணலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதென்ன அதிசயம், ஜீ நிறுவனம் உரிமை பெற்ற படத்தை ஹாட்ஸ்டார் எப்படி ஒளிபரப்பும்? என விசாரித்தால்,வியப்பூட்டும் தகவல் தெரியவருகிறது.

ஒரு தயாரிப்பாளரிடமிருந்து ஓர் இணைய நிறுவனம் படத்தை வாங்கிவிட்டால் அப்படத்தின் இணைய உரிமை முழுக்க அந்நிறுவனத்திடம் மட்டுமே இருக்கும். அந்நிறுவனம் விரும்பினால் சக நிறுவனங்களுக்கு ஒளிபரப்பு உரிமையை விற்பனை செய்துகொள்ளலாம் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறதாம்.

அதனடிப்படையில், ஆர் ஆர் ஆர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கே தெரியாமல், ஜீ நிறுவனம் ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் ஒரு பெரும்தொகை பெற்றுக் கொண்டு உரிமையைக் கொடுத்திருக்கிறது.

இப்போது ஜீ மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய இரு இணையங்களிலும் ஆர் ஆர் ஆர் படம் இருக்கும். ஆனால் அதன்பலன் தயாரிப்பாளருக்கு இல்லை.

பொதுவாக எல்லாப்படங்களையும் வாங்கும்போதும் இம்மாதிரி ஒப்பந்தம் போடப்படுகிறதெனவும் ஆனால் இதுவரை எந்த நிறுவனமும் இதுபோன்ற விற்பனையில் ஈடுபட்டதில்லை. எனவே இது வெளியில் தெரியாமல் இருந்தது எனவும் சொல்கிறார்கள்.

இப்போது ஜீ நிறுவனம் இப்படிச் செய்திருப்பதால் இனி விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களின் இணைய உரிமை வாங்கும் மற்ற நிறுவனங்களும் இதுபோல் செய்யலாம். 

அப்படிச் செய்யும் பட்சத்தில்,

எடுத்துக்காட்டாக ஒரு விஜய் படத்தை 110 கோடி கொடுத்து ஒரு நிறுவனம் வாங்குகிறது என்றால் அந்நிறுவனம் விரும்பினால் மற்ற நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டால் பலருக்கும் உரிமையைப் பிரித்துக் கொடுக்கலாம். அப்படிக் கொடுப்பதில் 50 கோடி இலாபம் கிடைக்கிறது என்றாலும் அதில் தயாரிப்பாளருக்கு ஒரு ரூபாய் கூடக் கிடைக்காது.

இத்தகவல் அறிந்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

Related Posts